பக்கம்:கோயில் மணி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கோயில் மணி

லாமா? நீங்கள் வயசில் பெரியவர்கள். உங்கள் உழைப்பில் நான் பங்குபெறுவதுதான் பாவம். இந்தச் செருப்பைப் பார்க்கிற போதெல்லாம் இது என் கண்ணை உறுத்துகிறது. உங்களுக்கு வீண் செலவு வைத்து விட்டேனே என்று தோன்றுகிறது. இதை நீங்கள் எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். எனக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டு மென்று எண்ணினால், அதைச் செய்யுங்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் வயசான உங்கள் பாவத்தை நான் கொட்டிக்கொண்டதாகவே எனக்குப் படுகிறது.”

குப்புசாமி பாவியா, காளிமுத்து பாவியா என்று யோசிக்கும்படி இருந்தன, இரண்டு பேருடைய பேச்சும். கடைசியில் காளிமுத்துவே வென்றார். குப்புசாமி. பேசாமல் கண்ணில் நீர் துளிக்க அந்தச் செருப்பை எடுத்துக்கொண்டு போனார், காளிமுத்து, பாரம் இறங்கியது போலப் பெருமூச்சு விட்டார்.

அதற்குப் பின் குப்புசாமி முன் போல் அடிக்கடி அந்த வீட்டுக்கு வருவதில்லை. அவருக்கு என்ன எண்ணமோ தெரியவில்லை. நம் வார்த்தையைக் கேட்கவில்லை என்ற கோபமோ என்று எண்ணினார் காளிமுத்து. ஆனால், ஆறு மாசம் கழித்து அந்தச் செருப்பை மறுக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது அவருக்கு.

ஒரு நாள் யாரோ ஒருவர் அந்தச் செருப்பை எடுத்துக்கொண்டு காளிமுத்துவைத் தேடி வந்தார்; “நீங்கள்தாம் காளிமுத்துவோ?” என்று கேட்டார்.

“ஆம்” என்று அவர் சொன்னார்.

“காய்கறி வண்டிக் குப்புசாமியை உங்களுக்குத் தெரியுமா?” என்று வந்தவர் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/54&oldid=1382852" இலிருந்து மீள்விக்கப்பட்டது