பக்கம்:கோயில் மணி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

49

“நன்றாகத் தெரியுமே! அந்தப் பெரியவர் இங்கே சில காலமாக வருவதே இல்லையே!”

“அவர் இனிமேல் வரமாட்டார்.”

“ஏன்?”

“அதைத்தான் சொல்ல வந்தேன். அவர் ஒரு மாசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இரண்டு நாளைக்கு முன்தான் காலமானார்.”

“என்ன காலமாகிவிட்டாரா?” என்று காளிமுத்துவும் அவர் மனைவியும் திடுக்கிட்டுக் கேட்டார்கள். அந்தப் பெண்மணி அழுதேவிட்டாள்.

“அவர் இறந்து போகும்போது, என்னிடம் ஒரு வேண்டுகோளைச் சொன்னார். அதை நிறைவேற்றத் தான் இங்கே வந்திருக்கிறேன். இந்தச் செருப்பை உங்களுக்குக் கொடுத்துத் தம் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டாராம். அது முடியவில்லையாம். எப்படியாவது இதை உங்களிடம் சேர்த்துவிட்டால் தம் ஆத்மா சாந்தி அடையும் என்று சொன்னார். இந்த வீட்டைத் தேடிக் கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. அந்தப் பெரியவர் மிகவும் மானி. மிகவும் நல்லவர். அவர் ஆசையை நிறைவேற்ற இங்கே வந்தேன்” என்று சொல்லிக் கையில் கொண்டு வந்த பொட்டலத்தை அவிழ்த்துச் செருப்பை எடுத்து வைத்தார்; “சரி எனக்கு வேலை இருக்கிறது; போய் வருகிறேன்” என்று சொல்லிப் போய்விட்டார். .

காளிமுத்து திக்பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தார். அந்தப் பெரியவர் உள்ளம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்று இப்போது ஊகித்துப் பார்த்தார். அவர் கண்களில் நீர் சுரந்தது. அவருடைய மனைவியோ புலம்பிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம்

கோயில்-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/55&oldid=1382858" இலிருந்து மீள்விக்கப்பட்டது