பக்கம்:கோயில் மணி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்க்—கீ !

55

மனைவியும் உயிராக இருந்தார்கள். அந்தக் குழந்தைக்கு அவன் ஒரு செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டான். வெளியிலே யிருந்து வரும்போதெல்லாம் அந்தப் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டே வருவான். “மங்க்-கீ!” என்று அவன் அழைக்கும்போது குழந்தை ஒரு கபடும் தெரியாமல் அப்பாவை எதிர்நோக்கி ஓடும். அம்மாவோ, “ஐயோ! இந்தச் சுபாவம் போகாதா” என்று உள்ளம் குமுறுவாள்.

“இப்படிக் கூப்பிடாதீர்களேன்; எனக்கு அவமானமாக இருக்கிறது!” என்று அவள் அழுவாள்.

“என்னடி அவமானம்? குழந்தை அழகி என்று நாமே விளம்பரம் பண்ணவேணுமோ? இதெல்லாம் ஒரு வேடிக்கை; வாழ்க்கையைக் குஷியாகக் கழிக்கிற வழி!” என்பான்.

“என்ன குஷியோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!”

பிள்ளைப் பேற்றுக்காகச் சுப்பராயன் மனைவி தன் தகப்பனார் ஊருக்குப் போயிருந்தாள். அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றலாகும். இப்போது ஒரு புது ஊருக்குப் போயிருந்தார். அங்கே எல்லா வசதிகளும் இருந்ததனால் தம் பெண்னைப் பிரசவத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

ஊருக்குப் போனவள் இரண்டு கடிதம் போட்டாள். பிறகு கடிதமே வரவில்லை. பின்பு மாமனார் சுபச் செய்தியை எழுதி அனுப்பியிருந்தார். ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் செளக்கியமாக இருப்பதாகவும் எழுதினார். சுப்பராயனுக்கு ஆண் குழந்தை பிறந்ததில் மகிழ்ச்சிதான். வேலை மிகுதியாக இருந்ததால் புண்ணியாகவாசனத்துக்கு அவனால் போக முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/61&oldid=1383909" இலிருந்து மீள்விக்கப்பட்டது