பக்கம்:கோயில் மணி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்க்-கீ !

57

விழவில்லை. அதிலிருந்து குழந்தைக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று ஊகித்துக்கொண்டான். ‘அடி பைத்தியமே! இதை எனக்கு எழுதக் கூடாதோ?’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான்.

வீட்டை அடைந்தான். மாமனார் அவனைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார், “என்ன இது? வருவதாகவே எழுதவில்லையே!” என்றார்.

“அப்படியானால் திரும்பிப் போகட்டுமா?” என்று தன் சுபாவம் போகாமல் கேட்டான் சுப்பராயன்.

“வாருங்கள் உள்ளே” என்று அழைத்துச் சென்றார் மாமனார்.

லலிதா தலையை நீட்டவில்லை. அவன் பொறுமை தாங்காமல் அவள் இருந்த அறைக்குப் போனான். அவள் குழந்தையைக் கீழே படுக்க வைத்திருந்தாள். “என்ன?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான். அவள் பேசவில்லை. கையினால் குழந்தையைக் காட்டினாள். அவன் கண்கள் குழந்தையின் மேல் விழுந்தன. அவ்வளவுதான்! அவன் காதுகளில் ஆயிரம் குரல்கள், “மங்க்-கீ மங்க்-கீ மங்க்-கீ!” என்று அலைமோதி ஆரவாரித்துப் புயலின் பேரிரைச்சலாகக் கிளம்பின.

குழந்தை கண்குழிந்து, மூக்கு இருக்கும் இடமே தெரியாமல் ஒட்டி, டார்வின் நியாயத்தை நிரூபிப்பதாய்க் கொழுகொழுவென்று கிடந்தது.

ஐந்து நிமிஷம் அவன் அசந்துபோய் நின்று விட்டான். பேச்சு வரவில்லை. பேசாமல் வெளியிலே நழுவினான்.

அந்தக் கணத்திலிருந்து அவனுடைய கிண்டலும் கோமாளித்தனமும் இருந்த இடம் தெரியாமல் கால் வாங்கி ஓடிவிட்டன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/63&oldid=1383913" இலிருந்து மீள்விக்கப்பட்டது