பக்கம்:கோயில் மணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேப்ப மரம்

63

எடுத்துக் காட்டியிருந்தார். முத்துசாமிக்கு அந்தக் கதையோட்டத்தோடே மற்றொரு நினைவோட்டமும் கூட வந்தது. ரிக்‌ஷாக்காரச் சின்னப்பனை வைது திட்டிய காட்சியும் கதைக்கு நிழல் போலத் தொடர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்தபோது இருந்த சூடு இப்போது குறைந்து அமைதி வந்திருந்தது. எரிந்து போன நகரில் வெந்தொழிந்த சாம்பலினிடையே பொருள்கள் சில அரையும் குறையுமாகக்கிடப்பதுபோல, அவர் உள்ளத்தில் கோபக் கனலால் எரியாத நல்ல எண்ணங்கள் சில தலைகாட்டின. “பாவம்!” என்று முணுமுணுத்தார். அப்போது அவருடைய பத்தினித் தெய்வம் அங்கே வந்தாள். “பாவம்! சமாசாரம் கேட்டீர்களோ?” என்று சொல்லிக்கொண்டே அவர் நாற்காலியைப் பற்றிக் கொண்டு நின்றாள். அவர் முணுமுணுப்பின் எதிரொலியோ அது? அவர், “என்ன?” என்று கேட்டார். அவளும் சின்னப்பனைப் பற்றியே சொன்கனாள்.

“சின்னப்பனுடைய குழந்தை போய்விட்டதாம்!”

“என்னவாக இருந்ததாம் ?”

“அம்மை பூட்டி இருந்ததாம். அது கடுமையாகி இறந்து விட்டதாம். பாவம் ! ஒரே குழந்தையென்று வேலம்மாள் சொன்னாள்.”

“என்ன!” -முத்துசாமி இடிந்துபோய் விட்டார். அவருக்குப் பேச்சு எழவில்லை. ‘அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா? தன் குழந்தைக்கு அம்மை வார்த்தது என்று சொன்னனோ! அதை நாம் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையே!’ அவர் இப்போது அகக் காட்சியில் சஞ்சரிக்கலனார்.

அடுப்பில் வேலையிருந்ததனால் அவருடைய மனைவி உள்ளே போய்விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/69&oldid=1383923" இலிருந்து மீள்விக்கப்பட்டது