பக்கம்:கோயில் மணி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கோயில் மணி

அவர் உள்ளத்தே காட்சி ஓடியது. “நீதான் என் குழந்தையைக் கொன்றாய்” என்று சின்னப்பன் அவரைப் பார்த்துக் கூவுகிறான். “ஏழை யென்றுதானே அவனை மிரட்டினாய்?” என்று மடிபில் கிடந்த நாவலாசிரியர் கேட்கிறார், “ஒரு கொத்தை ஒடித்தான் என்று உறுமினாயே! அவனுடைய குழந்தையையே கொன்று விட்டாயே!” என்று யாரோ ஒருவர் பேசுகிறார்.

கண்ணை மலர்த்திச் சன்னலுக்கு வெளியே பார்த்தார். எல்லாம் வெறும் பிரமை. அங்கே யாரும் இல்லை. வேப்பமரம் மாத்திரம் தன்னுடைய பூக்களாகிய சிறிய பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தது. “அட முட்டாளே !” என்று அது சிரிக்கிறதோ?

முத்துசாமிக்குத் தாமே அந்தக் குழந்தையைக் கொலை செய்துவிட்டது போன்ற ஏக்கம். ‘ஒரு கொத்து ஒடித்தால் மரமே பட்டா போய்விடும்? மரம் எதற்காக இருக்கிறது? வருஷப் பிறப்புக்குப் பூங்கொத்தை ஒடிக்க வேண்டுமென்று நினைத்தோமே; அதுமட்டும் செய்யலாமா? மரமும் குழந்தையும் ஒன்றாவார்களா? மரம் வெட்ட வெட்டத் தளிர்க்கும், குழந்தை செத்துப் போனால்...’ அவருக்கு மேலே யோசனையை ஓட விடப் பயமாக இருந்தது. புத்தகத்திலே கண் ஓட்டினார். கண் ஓடியதேயன்றிக் கருத்து ஓடவில்லை. சின்னப்பனின் குழந்தை சவமாகத் தம் காலடியிலே கிடப்பது போன்ற உணர்ச்சி. காலை எடுத்து நாற்காலி மேலே வைத்துக் கொண்டார். தம் பேதைமையை நினைத்துக் கொஞ்சம் சிரிப்புக்கூட வந்தது. புத்தகத்தை வைத்துவிட்டு வெளியிலே போய்வரலாமென்று புறப்பட்டார்.

“ஒருகால் எதிரே சின்னப்பன் வந்தால்?” மறுபடியும் உள்ளே போனார். புத்தகத்தை எடுத்தார். வேப்ப மரத்தைப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/70&oldid=1383926" இலிருந்து மீள்விக்கப்பட்டது