பக்கம்:கோயில் மணி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கோயில் மணி

கூந்தலைப் பிரார்த்தனைக்காகக் களைந்துவிட்டு வந்தால் எப்படித் தோற்றுவார்களோ அப்படி அந்த மரம் தோற்றியது. அவர் மொட்டை மரத்தைப் பார்க்கவில்லை. இன்னும் சில நாட்களில் தளதள வென்று புதுத் தளிர் விட்டுப் பளபளப்புடன் நிற்கும் கோலத்தையே உள்ளே கண்டார். வேப்பமரமே புதுப் பிறவி எடுக்கப் போகிறது.

ஆனால்—? சுரீரென்றது உள்ளம். செத்துப்போன சின்னப்பனின் குழந்தை அகக்கண்ணில் வந்து நிற்கிறது. இவ்வளவு மாதங்கள் மறந்திருந்த நினைப்பு எங்கிருந்தோ வந்து மேலே மிதந்தது. ஆனால் முன்பு போல் அத்தனை துன்பத்தை உண்டாக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அவருடைய பெண் குழந்தைக்குக் கடுமையான ஜூரம் வந்தது. டாக்டர் பார்த்தார். “இரண்டு நாள் பார்த்துக்கொண்டு சொல்கிறேன்” என்றார். பிறகு, “ஒருகால் அம்மை ஜூரமாக இருக்கலாமோ என்று பார்க்கிறேன்” என்றார்.

முத்துசாமிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “அம்மையா?” —அவர் கலக்கம் அந்தச் சொல்லில் புலம்பியது.

“பயப்படாதீர்கள்; அம்மையாக இருந்தால் என்ன ? ஜாக்கிரதையாக இருந்தால் போகிறது!” என்று சொல்லிவிட்டு டாக்டர் போய்விட்டார்.

முத்துசாமிக்குப் பழைய நினைவுகள் வந்தன; “கடவுளே, என்னையே தண்டித்துவிடு; என் குழந்தையை ஒன்றும் செய்யாதே” என்று மோனக்குரலில் அவர் கதறினார்.

டாக்டர் சொன்னபடியே குழந்தைக்கு வைசூரிதான் பூட்டியது. முத்துசாமி எத்தனையோ தெய்வங்களை வேண்டிக்கொண்டார்; என்ன என்னவோ செய்வதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/72&oldid=1383934" இலிருந்து மீள்விக்கப்பட்டது