பக்கம்:கோயில் மணி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணியம் ஒரிடம்

75

நிகழ்ச்சியாக இடம் பெறும். வீதி தோறும் உஞ்ச விருத்தி எடுத்து அரிசி தொகுத்து அதைக் கொண்டு உணவு வழங்குவார்கள். மக்களும் வஞ்சகமின்றி வாரிக் கொடுப்பார்கள்.

அந்தப் பகுதிக்கு அருகில் இரண்டு சேரிகள். பஜனை நடக்கும்போது சேரியில் உள்ளவர்களில் சிலர் வந்து கேட்பதுண்டு. மார்கழி மாதப் பஜனையில் விடியற் காலையில் குழந்தைகள் நாமாவளி பாடுவார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் பொங்கல் பிரசாதம் வழங்குவார்கள். அந்தக் குழந்தைகளின் கூட்டத்தில் சேரிக் குழந்தைகளும் வேறுபாடின்றிக் கலந்து கொள்ளும்; நாமாவளி சொல்லும்.

இப்போது சேரிகளுக்கு வந்த ஆபத்தை எண்ணி இந்தப் பஜனை சங்கத்தார் சில மூட்டை அரிசியைத் தொகுத்தார்கள். காய்கறி, பருப்பு முதலிய பண்டங்கள் வந்து குவிந்தன. அவரவர்கள் தங்கள் தங்களாலான தொண்டைப் புரிந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் விறகு கொண்டு வந்தார்கள். ஒருவருடைய வீட்டுக்குப் பின் பக்கத்தில் கோட்டையடுப்பு வெட்டிச் சமையல் செய்ய ஏற்பாடு செய்தார்கள் ஏழைகள் வீதியில் உணவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்.

சமையல் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் சிலர் காய்கறிகளை நறுக்கினர்கள். ஒரு பக்கம் சிலர் பருப்பைச் சுத்தம் செய்தார்கள். ஒரு பக்கம் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஏழைகளுக்குச் சோறு படைக்க அந்தத் தொண்டர்கள் வேலை செய்து, கொண்டிருந்தார்கள்.

அப்போது வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அரசியல்வாதி ஒருவர் இறங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/81&oldid=1383953" இலிருந்து மீள்விக்கப்பட்டது