பக்கம்:கோயில் மணி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணியம் ஒரிடம்

77

இருக்கிற பாத்திரங்களையும் விறகையும் வைத்துக் கொண்டு தொண்டர்கள் உழைத்தார்கள். விறகு புகைந்தது. மண்ணெண்ணெயைக் கொட்டினார்கள். எப்படியோ சாம்பாரை முதலில் செய்து இறக்கி வைத்து விட்டுச் சாதத்தையும் வடித்தார்கள். பெரிய மூங்கில் பாயை விரித்துச் சாதத்தைக் கொட்டி அதன்மேல் சாம்பாரை விட்டுக் கலந்தார்கள்.

“சாம்பார் வாசனை வீதியையே தூக்கி அடிக்கிறது” என்றார் ஒருவர்.

பருப்பு எப்படி வெந்திருக்கிறது தெரியுமா? என்றார் ஒருவர்.

“எல்லாம் கண்ணபிரான் திருவுள்ளம்; அவனுக்கே இது நிவேதனம். அவனேதான் இந்த ஏழைகளின் உருவில் வந்து நிற்கிறான்” என்றார் ஒரு கிழவர்.

“இங்கே சாப்பாடு போடுகிறது மற்றச் சேரிகளுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் ஒரு கிழவர்.

“நாம் என்ன தண்டோராவா போட்டோம்? இங்கே பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு நம்மைத் தெரியும்; நமக்கும் அவர்களைத் தெரியும்” என்றார் தொண்டர் களின் தலைவர்.

“ஆமாம். எல்லாச் சேரிக்காரர்களுக்கும் போட்டோம் என்று வெறும் பெருமை எதற்கு? இந்த ஏழைகளுக்கு வயிறு நிரம்பப் போட்டால் போதாதா?”

இடையிலே அந்தக் கிழவர் சொன்னர்; “ஆமாம் அப்பா ! நம்முடைய பையன்களிடம் சொல்லுங்கள். அதட்டி மிரட்டிக் கலவரம் செய்யப் போகிறார்கள். ஏழைகள் எத்தனை கேட்டாலும் போடுங்கள். யாருக்கும் குறை இருக்க வேண்டாம். அவர்கள் வயிறு குளிர்ந்தால் எம்பெருமான் உள்ளம் குளிர்வான்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/83&oldid=1383958" இலிருந்து மீள்விக்கப்பட்டது