பக்கம்:கோயில் மணி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கோயில் மணி

உணவு பரிமாறத் தொடங்கி விட்டார்கள். முதலில் ஒரே குழப்பம்; “எனக்கு, எனக்கு” என்று முந்திக் கொண்டு வந்தார்கள் ஏழைகள். சில தொண்டர்கள், “எல்லோருக்கும் நிச்சயமாக வயிறு நிரம்பச் சோறு கிடைக்கும். எல்லோரும் வீதியில் இப்படியே வரிசையாக உட்காருங்கள் என்று” சொல்லி அமர்த்தினார்கள். கூட்டம் ஒழுங்குக்கு வர அரை மணி ஆகிவிட்டது.

இப்போது ஏழைகள் தையல் இலையில் போட்ட சாம்பார் சாதத்தைச் சாப்பிடத் தொடங்கினார்கள். தொண்டர்கள் தூக்குச் சட்டியும் அகப்பையுமாக அங்கங்கே பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் அந்தக் கார் வந்தது. ஆமாம், போசலராவ் கார்தான். அதிலிருந்து நாலைந்து பேர் இறங்கினார்கள். வீதியின் ஓரத்தில் காரை நிறுத்தி இறங்கி வர வேண்டி இருந்தது. வீதி முழுவதுந்தான் ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களே.

எல்லாம் ஆயிற்றா? சரி, சரி, எங்கே என் கையில் சாம்பார் சட்டியைக் கொடுங்கள் என்றார் காரில் இருந்து இறங்கிய ஒருவர். அவருக்குச் சாம்பார் சாதம் கலந்து கொடுக்கிறார்கள் என்று தெரியாது. அவரே ஒரு தொண்டர் கையிலிருந்து வலிய ஒரு தூக்குச் சட்டியைப் பிடுங்கிக் கொண்டார். கனவான் ராவ் அவர்களும் ஒரு தூக்குச்சட்டியை வாங்கிக் கொண்டார்.

உம், உம், சீக்கிரம் சாப்பிடுங்கள், என்று அதட்டினார்கள்.

அதட்டாதீர்கள். அவர்கள் நிதானமாகச் சாப்பிடட்டும் என்றார் ஒரு தொண்டர்.

“வேறு வேலை இல்லையா? கவனிக்க வேண்டாமா?” என்றார் ஆடம்பரக்காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/84&oldid=1383959" இலிருந்து மீள்விக்கப்பட்டது