கோவூர் கிழார்
தொண்டை நாட்டில் கோவூர் என்பது ஓர் ஊர். அங்குள்ள வேளாளர் குடி ஒன்றில் கோவூர் கிழார் பிறந்தார். சால்பும், தெய்வ பக்தியும், தமிழ்ப் புலமையும், பேரறிவும் நிரம்பிய குலத்திற் பிறந்த அவருக்கு இளமையிலே சிறந்த புலமை உண்டாயிற்று. அவருடைய தாய் தந்தையர் வழக்கப்படியே அவருக்கு ஒரு பெயர் வைத்தார்கள். இளமையில் புலமை நிரம்பிய அவர் வளர வளர, அறிவும் புகழும் வளர்ந்தன. இந்த நாட்டில் நன்கு மதிப்பிற்குரிய பெரியோர்களைப் பெயர் சொல்லி அழைத்தல் மரபன்று. அவர்களுடைய ஊரையோ, குடியையோ, வேறு சிறப்பையோ சுட்டித்தான் அவர்களைக் குறிப்பிடுவார்கள். மதுரையில் பழங்காலத்தில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர் அவர். அவருடைய இயற்பெயர் இன்னதென்று இப்போது தெரியாது. ஆசிரியரைக் கணக்காயர் என்பார்கள். அந்தப் பெரியாருடைய பெயரை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை; எழுதுவதும் இல்லை. ஆனால் எல்லாரும் அவரைக் கணக்காயனார் என்றே குறிப்பிட்டு வந்தார்கள். கடைசியில் அவருக்கு இயற்கையாக இருந்த பெயரை யாவரும் மறந்துவிட்டார்கள். மதுரைக் கணக்காயனார் என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. பெரும்புலவராக விளங்கிய நக்கீரருக்குத்