8
தந்தையார் அவர். நக்கீரரைப்பற்றிப் பழம் புலவர்கள் குறிக்கும்போது, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று எழுதுவது வழக்கம். அந்தக் கணக்காயனாருடைய இயற்பெயர் இன்னதென்பது இன்று யாருக்கும் தெரியாது.
அதுபோலக் கோவூரிற் பிறந்த இந்தப் புலவர் பெருமானுக்கும் தாய் தந்தையர் வைத்த பெயர் இன்னதென்று நமக்குத் தெரிய வகையில்லை. வேளாண் குடியிலே பிறந்தவர்களுக்குக் கிழார் என்ற சிறப்புப் பெயர் உண்டு. இந்தப் புலவரை யாவரும் கோவூர் கிழார் என்றே வழங்கத் தொடங்கினர். யாவரும் இவருடைய ஊரைச் சொன்னார்களே ஒழியப் பேரைச் சொல்லவில்லை. பெரியவர்கள் ஊரைச் சொன்னாலும் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று என்பது தமிழ் மக்களின் எண்ணம். “ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது” என்ற பழமொழி இந்த மரபை நினைப்பூட்டுகிறது.
கோவூர் கிழாரின் பெருமையை உறையூரில் உள்ள மக்கள் அறியும் வாய்ப்பு ஒன்று நேர்ந்தது. முதுகண்ணன் சாத்தனார் அடிக்கடி சோழ நாட்டில் உள்ள புலவர்களைக்கூட்டிப் புலவர் அரங்கை நடத்தி வந்தார். முதிய புலவர்களும் இளம் புலவர்களும் அந்த அரங்கத்துக்கு வந்தார்கள். அரங்கில் அரசனே தலைவனாக இருப்பான். முதுகண்ணன் சாத்தனார் புலவர்களில் தலைவராக விளங்குவார். அவரவர்கள் தாங்கள் அரசனைப் பற்றிப் பாடிய பாடல்களைக் கூறுவார்கள். அப்