பக்கம்:கோவூர் கிழார்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

செயலால் நன்மை இல்லை, தீய செயலால் தீமை இல்லை என்று சொல்வோர்களுடைய உறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இந்த உலகில் மக்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கை. கூத்தாடுபவர்கள் நாடக அரங்கில் அவ்வப்போது பல்வேறு கோலந் தாங்கி வந்து தம் பகுதியை நடித்துக் காட்டிப் போய்விடுவது போல மக்கள் வருகிறார்கள்; போகிறார்கள். இங்கே புகழ் ஒன்று தான் நிற்கும். நீ ஈட்டிய பொருள் இசையை விளைவிக்கட்டும்” என்று பாடினார். அப் புலவர் கூறியவற்றையெல்லாம் அமுத மொழியாகக் கொண்டான் மன்னன் நலங்கிள்ளி.

அதுகாறும் புலவர் பலர் உறையூருக்கு வந்து சென்றனர். எல்லாக் கலைஞர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று முதுகண்ணன் சாத்தனார் அறிவுறுத்திய பிறகு மன்னன் பாணருக்கும் பொருநருக்கும் பரிசில் வழங்கலானான்.

பாணர் என்பார் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த இசைப் புலவர்கள். அவர்கள் பலவகையான வாத்தியங்களை வாசிப்பார்க்ள். சிறப்பாக யாழை வாசித்து மன்னர்களிடமும் செல்வர்களிடமும் பரிசு பெற்று வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய மனைவிமார் அபிநயம் பிடித்துப் பாடுவார்கள். அவர்களை விறலியர் என்று சொல்வது வழக்கம். ஒரு பக்கத்தில் மாத்திரம் அடிக்கும் தடாரி என்னும் தோற்கருவியை வாசிக்கிறவர்கள் பொருநர். இக்காலத்தில் ‘கிஞ்சிரா’ என்று வழங்கும் வாத்தியத்தைப்

2