பக்கம்:கோவூர் கிழார்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

போன்றது அது. அதற்குக் கிணையென்றும் ஒரு பெயர் உண்டு. அதனால் பொருநரைக் கிணைப் பொருநர் என்றும் சொல்வதுண்டு. இப்படியே கூத்தை ஆடிக் காட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் கலைஞர்களைக் கூத்தர்கள் என்று சொல்வார்கள். பாணர், விறலியர், பொருநர், கூத்தர் ஆகியவர்கள் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கென்று ஊர்கள் இருந்தாலும், எங்கெங்கே தங்கள் கலையை விரும்பி ஆதரிக்கும் செல்வர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் செல்வார்கள். தம்மைப் போற்றிப் பேணும் புரவலர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடிச் செல்வார்கள்.

தம்முடைய கலையில் திறமை பெற்று மேலும் மேலும் அதை வளர்ப்பதையன்றி வேறு எதனையும் அறியாதவர்கள் அவர்கள். ஏதேனும் பொருள் கிடைத்தால் அதை உடனே செலவு செய்துவிட்டு, மறுபடியும் யாரையேனும் தேடிக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை புலவர்களிடத்திலும் இருந்தது. இதனால் இரவலரென்றும், பரிசிலரென்றும் கலைஞர்களைக் கூறும் வழக்கம் ஏற்பட்டது.

நாள்தோறும் கலை நயம் கண்டு பாராட்டும் மக்கள் கிடைப்பார்களா? எங்கோ சில இடங்களில்தான் பாணரையும் பொருநரையும் பாதுகாக்கும் செல்வர்கள் இருப்பார்கள். அவர்களை அண்டிச் சில நாட்கள் தங்குவார்கள். பிறகு அவர்கள் வழங்கும் பொருளைப் பெற்றுச் சென்று