21
பெரு மதிப்பு இருந்தது. இவற்றை அறிந்த நலங்கிள்ளி அவரையே தன்னுடைய அவைக்களப் புலவராக ஆக்கிக்கொண்டான். புலவர் பெருமக்கள் இந்தச் செயலைப் பாராட்டினார்கள்.
கோவூர் கிழார் அவைக்களப் புலவராக இருந்ததோடு, அமைச்சர் குழுவில் ஒருவராகவும் இருந்தார். பாண்டி நாட்டின்மேல் படையெடுக்க வேண்டும் என்ற முடிபை அவரும் ஆதரித்தார். நாட்டு நலம் கருதும் மன்னன் தன்னுடைய நாட்டில் பிற மன்னன் புகுந்து அதனைப் போர்க் களமாக்குவதை விரும்பமாட்டான். பகை மன்னனுடைய நாட்டுக்குச் சென்று அங்கே அவனை மடக்கித் தோல்வியுறச் செய்வதே சிறந்த வீரம். ஆதலால் நலங்கிள்ளி பாண்டி நாட்டின்மேற் படையெடுப்பது சிறந்த செயலென்று புலவர் கூறினார்.
நலங்கிள்ளி அரியணை ஏறின பிறகு இது வரையில் போரே செய்யவில்லை. பகைவர்கள் இல்லாமையால் உண்டான நிலை அன்று அது புற நாட்டுப் பகையும் உள்நாட்டில் நெடுங்கிள்ளியின், பகையும் இருந்தன. தன்னுடைய வீரத்தைக் காட்டாமல் இருந்தால் இந்தப் பகைகள் பெருகிவிடும். ஆதலின் தக்க சமயத்தில் தன் படையின் ஆண்மையையும் தன் ஆண்மையையும் வெளிப்படுத்துவது இன்றியமையாதது என்ற நினைவு இதுகாறும் நலங்கிள்ளியின் நெஞ்சில் கருவாகவே இருந்தது. படைப் பலத்தைச் சேர்த்து வந்தான். இப்போது தன்னுடைய படைகளின் துணையால்