பக்கம்:கோவூர் கிழார்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மதுரையளவும் வந்துவிடுவான் என்ற அச்சம் உண்டாயிற்று. தன்னுடைய படைக்குச் சோழ வீரர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லை என்பதை அவன் இப்போது உணரத் தொடங்கினான். இனி ஏதேனும் வலிய துணையை நாடினாலல்லாமல் அந்தப் போரில் தனக்கு வெற்றி இல்லை என்ற உண்மை அவனுக்குப் புலனாயிற்று.

போரை நிறுத்திச் சோழ மன்னனிடம் சரண் புகுந்தால் தப்பலாம். அதற்கு மனம் வரவில்லை. தக்க துணையாக யாரை அழைத்து வரலாம் என்று யோசித்தான். சேர மன்னனுடைய நினைவுதான் அவனுக்கு உண்டாயிற்று. உடனே தூதுவன் ஒருவனை அந்த மன்னனிடம் அனுப்பி, “இப்போது துணைப் படைகளை அனுப்பினால் சோழ மன்னனைப் புறங்கண்டு விடலாம். இது தான் ஏற்ற தருணம். இல்லையானால் பாண்டி நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் சோழ மன்னனால் எந்தச் சமயத்திலும் தீங்கு விளையும்” என்று சொல்லச் செய்தான்.

பாண்டி நாட்டினிடையில் சோழ மன்னன் தன் படைகளுடன் வந்திருக்கிறான் என்பதைக் கேட்ட சேரன், அவன் படையை அப்படியே வளைத்துக் கொள்ளலாம் என்று எண்ணமிட்டான். உடனே பெரும்படை ஒன்றுடன் புறப்பட்டான். போர் நடக்கும் இடத்திற்கு அவன் படையோடு வந்து சேர்ந்தவுடன் பாண்டியன் படைகளுக்குப் புதிய ஊக்கம்