31
அவனுக்கு வேறு நாட்டில் ஆசை இல்லை; மண்ணாசை இல்லாத மன்னன் அவன். ஆனால் இப்போது பாண்டி நாட்டுக்குள்ளே புகுந்து இந்தப் பாசறையில் இருக்கிறானே. ஏன்? அவனுக்குப் புகழாசை உண்டு. தன்னை இகழும் வேந்தர்களை அடக்கியாளும் பேராண்மையுடையவன் என்ற நல்ல இசையை விரும்பினான். அதனால்தான் இந்தப் போரில் ஈடுபட்டான்.
பகைவர்களுடன் போர் புரிவதற்கு வேண்டிய படைப்பலம் நலங்கிள்ளியிடம் இருந்தது. அவனுடைய யானைப் படை எதற்கும் அடங்காதது. தம்முடைய தந்தங்களால் பகைவர்களுடைய மதிலையும் மதிற் கதவுகளையும் குத்தும் ஆற்றலுடையவை அந்த யானைகள். அவனுடைய வீரர்களோ போர் என்ற சொல்லக் கேட்டாலே ஆனந்தக் கூத்தாடுவார்கள். சோழ நாட்டை விட்டுப் பல காடுகளைக் கடந்து சென்று போர் செய்ய வேண்டுமானாலும், “ஐயோ! அவ்வளவு தூரமா? என்று சொல்ல மாட்டார்கள்; இதோ! புறப்பட்டுவிட்டோம்” என்று சொல்வார்கள்.
இத்தகைய யானைப் படையையும் வீரர் பெரும் படையையும் உடைய சோழன் போர் செய்யத் தொடங்கி மாற்றரை அடக்கி வெற்றி கொண்டான். இந்தச் செய்தி மற்ற நாட்டிலுள்ள அரசர்கள் காதில் பட்டது. வடநாட்டில் உள்ள அரசர்களும் அறிந்தார்கள். அவர்களுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா? “சோழன் வேறு நாட்டுக்குக் சென்று வென்றான்,