ஆவூர் முற்றுகை
நலங்கிள்ளி உறையூருக்கு வந்து சேர்ந்தவுடன் அவனுடைய நாட்டில் நிகழ்ந்த ஒரு புதிய நிகழ்ச்சியைக் கேள்வியுற்றான். சேரனும் பாண்டியனும் நலங்கிள்ளியின் ஆற்றலுக்கு அஞ்சிப் போரை நிறுத்திப் பணிந்தனர். ஆனால் இங்கே சோழநாட்டின் அரியணைக்குத் தானே தனியுரிமையுடையோன் என்று சொல்லிக்கொண்டிருந்த நெடுங்கிள்ளி சிறிதேனும் அஞ்சாமல் ஆவூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். சோழன் நலங்கிள்ளியும் அவனுடைய படையும் பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துச் சென்றிருந்தபோது, இதுதான் ஏற்ற காலமென்று எண்ணிய நெடுங்கிள்ளி ஒரு சிறு படையுடன் சென்று ஆவூரைத் தாக்கினான். ஆவூரில் ஒரு கோட்டை இருந்தது. ஒரு சிறிய படையும் இருந்தது. ஆனால் அந்தப் படை அப்போது பாண்டி நாட்டுக்குச் சென்றிருந்தது. ஆவூர்க் கோட்டை அப்போது தக்க பாதுகாப்பு இல்லாமல் இருந்ததென்றே சொல்லவேண்டும். நெடுங்கிள்ளி இப்படிச் செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதுகண்ணன் சாத்தனார் இருந்த காலத்தில் அவர் கூறியபடி நலங்கிள்ளி வஞ்சின மொழியாக அமைத்த பாட்டை நெடுங்கிள்ளிக்கு அனுப்பினானே, அப்பொழுது முதல் அவன் தன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் இருந்தான்.