36
இந்த அசட்டுத் தைரியத்தைக் கண்டு கோவூர் கிழார் இரங்கினார். மண்ணாசை என்பது எவ்வளவு தூரம் அறிவை மயக்கிவிடுகிறது என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். பாண்டி நாடும் சேர நாடும் சோழனுடைய படைப் பலத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கையில் நெடுங்கிள்ளி அதை இகழ்ந்தான். இதைக் காட்டிலும் பேதைமை வேறு உண்டா?
இனி வேறு வழியில்லையாதலால் ஆவூரை முற்றுகை இடுவதாக அரசன் துணிந்தான். கோவூர் கிழார் அரசனிடம் ஒன்று கூறினார். “ஆவூருக்குப் படைகளுடன் சென்று கோட்டையைச் சூழ்ந்துகொண்டாலே போதும்; போர் செய்ய வேண்டாம். கோட்டையையும் அழிக்க வேண்டாம். அந்தக் கோட்டை அரசர்பிரானுடைய முன்னோர்களால் கட்டப்பெற்றது. நெடுங்கிள்ளி உள்ளே பதுங்கியிருக்கிறானென்று அந்தக் கோட்டையைத் தகர்த்தல் நல்லது அன்று. புறத்திலே படைகள் சூழ்ந்து நின்றால் உள்ளே ஒன்றும் செல்ல இயலாது. உள்ளே உள்ளவர்களுக்கு உணவுப் பொருள் முதலியவை போகாவிட்டால் கோட்டைக்குள் இருக்கும் படை வீரர்கள் பசியினால் துன்பம் அடைவார்கள். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். ‘உணவு வேண்டும், உணவு வேண்டும்’ என்று அவர்கள் கதறுவார்கள். அவர்களுடைய கூக்குரல் தாங்காமல் நெடுங்கிள்ளி, ஒன்று இந்தக் கோட்டையை விட்டு ஓடிப்போவான்; அல்லது உள்ளே இருந்து சாவான்” என்றார். அவர் சொன்னது தக்க