பக்கம்:கோவூர் கிழார்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

படைகள் நான்கைந்து நாட்கள் ஒரு குறையும் இன்றி இருந்தன. படை வீரர்களும் மன்னனும் பல குடும்பத்தினரும் ஆவூர்க் கோட்டைக்குள் இருந்தார்கள். ஓரளவு சேமித்து வைத்திருந்த நெல் முதலிய உணவுப் பொருள்களை வைத்துக் கொண்டு அவர்கள் நாட்களைக் கழித்தார்கள். வர வர அவர்களிடம் இருந்த பொருள்கள் சுருங்கின. மனம் போனபடி போக இயலாமல், சிறைப்பட்டவர்களைப்போலக் கோட்டைக்குள் இருந்த மக்கள் துன்புறத் தொடங்கினார்கள்.

யானையைக் கட்டித் தீனிபோடுவது எளிய செயலா? உள்ளே யானைப் படை இருந்தது. அது சிறிய படையேயாயினும் அதில் இருந்த யானைகளுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. உணவுப் பொருள்கள் சுருங்கச் சுருங்க மக்கள் தம் உணவைக் குறைத்துக்கொண்டனர். குழந்தைகளுக்கும் கணவன்மார்களுக்கும் உணவை அளித்துவிட்டு மகளிர் தாம் ஒரு பொழுது மாத்திரம் உண்ணலாயினர்.

இந்த அவலமான நிலையிலும் நெடுங்கிள்ளி தன் பிடிவாதத்தை விடவில்லை. “எல்லாரும் மடிந்தாலும் கோட்டைக் கதவைத் திறந்து பகைவரை வரவேற்கமாட்டேன்” என்று இருந்தான். தன் கண்முன்னே மக்கள் வாடுவதை அவன் கண்டான். குழந்தைகள் பாலின்றி அழுவதைக் கேட்டான். அவன் மனம் மாறவில்லை. அவனுடைய அசட்டுத் துணிவைக் கண்டு கோட்டையில் உள்ளவர்கள் அஞ்சினார்கள்.