பக்கம்:கோவூர் கிழார்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சிறைப்பட்டுக் கிடந்தவர்களில் பெரும்பாலோருக்கு எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. கோவூர் கிழார் வரப் போகிறார் என்ற செய்தி அவர்களுடைய உள்ளத்தில் புதிய நம்பிக்கை முளைக்கும்படி செய்தது. பாலை நிலத்தில் மழை பெய்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.

நெடுங்கிள்ளி அந்த ஓலைக்கு விடை அனுப்பினான். எந்தச் சமயத்திலும் கோவூர் கிழாரை வரவேற்கக் காத்திருப்பதாகச் செய்தி அனுப்பினான். சொன்ன சொல்லை மாற்றாமலும் வரம்பு கடவாமலும் தமிழ் மன்னர்கள் நடந்தார்கள். ஆதலால் கோவூர் கிழார் உள்ளே வருகிறார் என்று சொல்லிவிட்டு ஏமாற்றிப் படையை உள்ளே புகுத்திவிடும் எண்ணம் நலங்கிள்ளிக்கு இல்லை.

குறிப்பிட்டபடி கோவூர் கிழார் மாத்திரம் கோட்டைக்குள் நுழைந்தார். மதில் வாயிலில் நின்ற காவலர்கள் அவரை உள்ளே விட்டுக் கதவைச் சாத்திக்கொண்டார்கள். நெடுங்கிள்ளி வாயிலருகிலே நின்று புலவரை வரவேற்றான். கோவூர் கிழாரின் பெருமையைத் தமிழுலகம் முழுவதும் நன்கு அறிந்திருந்த காலம் அது. ஆகவே, அவர் ஏதேனும் சொன்னால் நெடுங்கிள்ளி மறுக்க மாட்டான் என்று யாவரும் நம்பினர்.

புலவர் பெருமான் கோவூர் கிழார் உள்ளே புகுந்து சுற்றிப் பார்த்தார். யானைப் படையைப் பார்த்தார். தக்கபடி உணவு பெறாமல் யானைகள்