பக்கம்:கோவூர் கிழார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வாழ்ந்த அவற்றை இப்படிப் பட்டினி போடுகிறாயே! இது தகுமா?”

நெடுங்கிள்ளி ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஏதாவது விடை சொல்வானோ என்று எதிர்பார்த்துக் கோவூர் கிழார் தம் பேச்சைச் சிறிதே நிறுத்தினார். அம் மன்னன் ஏதும் பேசவில்லை. புலவர் உண்மையைத்தானே எடுத்துச்சொன்னார்? அதை அவன் மறுக்க முடியுமா? அல்லது இந்த நிலை முறைப்படி ஏற்பட்டது என்று சொல்வானா? கோவூர் கிழார் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

“மக்கள் நிலையைக் கண்டு பொறுக்க முடியவில்லை. தாய்மார்கள் போதிய உணவு இல்லாமல் உடம்பு மெலிந்திருக்கிறார்கள். அவர்களிடம் போதிய பால் இல்லாமையால் இளங் குழந்தைகள் பசி நீங்காமல் கதறுகின்றன. அந்தக் குழந்தைகளின் அலறல் உன் காதில் விழவில்லையா? அன்றி, விழுந்தும் உன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு விட்டாயோ?”

மறுபடியும் கோவூர் கிழார் சிறிது நேரம் தம் பேச்சை நிறுத்தி மெளனமாக இருந்தார். தாம் கூறும் வார்த்தைகள் அவன் உள்ளத்தில் இறங்கி அழுத்தமாகப் படவேண்டும் என்ற எண்ணத்தால் அப்படிச் செய்தார். உண்மையில் அவர் இந்தக் காட்சிகளை எடுத்துக் காட்டும்போது நெடுங்கிள்ளியின் அகக் கண்ணில் அவை பெரிய உருவம் எடுத்துக்கொண்டு நின்றன. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/49&oldid=1111067" இலிருந்து மீள்விக்கப்பட்டது