பக்கம்:கோவூர் கிழார்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

”இடம் பொருள் ஏவல்கள் கைகூடியமையால் நலங்கிள்ளிக்கு உறையூரில் இருந்து அரசாளும் உரிமை கிடைத்தது. அந்த உரிமையை நீங்கள் இழந்து நிற்கிறீர்கள். உண்மையை ஆராய்ந்தால் நீங்களே சோழ நாட்டு ஆட்சிக்கு உரியவர்கள். நலங்கிள்ளி உங்களினும் இளையவன். நீங்கள் எங்களைப் போன்றவர்களின் பலம் இருந்தும் நலங்கிள்ளியை நேரே உறையூருக்குச் சென்று தாக்கி அரியணையைக் கைப்பற்றாமல் வாளா இருக்கிறீர்கள். தக்கபடி சூழ்ச்சி செய்து அத்தகைய முற்றுகைக்கு ஆயத்தம் செய்யுங்கள்; சோழ நாட்டில் உள்ள வேளிர்கள் அத்தனை பேரும் உங்களுக்குத் துணை வருவார்கள்” என்று மீட்டும் நெடுங்கிள்ளிக்கு மண்ணாசையை உண்டாக்கினர்கள்.

அரச குலத்திற் பிறந்தவர்களுக்கு முறையோ, அன்றோ, எப்படியாவது தாங்கள் அரசராக இருக்கவேண்டும் என்ற ஆசை உண்டாவது இயல்பு. அது மிக வளர்ந்துவிட்டால் எல்லாவற்றையும் அடியோடு இழக்கும் வரைக்கும் அவர்களுடைய பகை முயற்சிகள் நிற்பதில்லை. இக்காலத்தில் பங்காளிகள் சில சொத்துக்களுக்காக வழக்கிட்டு நீதிமன்றங்களிலெல்லாம் ஏறித் தம்முடைய பொருளத்தனையையும் இழந்து நிற்பதையும், அப்படி இழந்தாலும் மறுபடியும் வழக்குத் தொடுக்கப் பல வகையில் முயல்வதையும் நாம் பார்க்கிறோம். நிலங்களுக்காக இவ்வளவு தூரம் போராடும் மன இயல்பே அக்காலத்தில்