இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சோழன் நலங்கிள்ளி
“இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!”
“சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?”
“எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இளைய மன்னனுக்கு இருக்குமா?”
“பழங்காலத்தில் சோழ குலத்தில் கதிரவனாக விளங்கிய கரிகாலன் இன்னும் இளமையில் அரசை ஏற்றான். அவன் பெற்ற புகழை யார் பெற முடியும்? இன்றும் சோழ நாடு காவிரியினால் வளம் பெற்று வாழ்கிறதற்குக் காரணம் கரிகாலன்