பக்கம்:கோவூர் கிழார்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

இளந் தத்தனார் நிலை என்ன ஆயிற்றோ என்ற கவலையில் மூழ்கியிருந்தான். அதனை அறிந்த கோவூர்கிழார் சிறிதும் காலம் தாழ்த்தாது உடனே புறப்பட்டு விட்டார், உறையூரை நோக்கி. கோட்டைக்குள்ளே புகுந்தார். புகும்போதே விசாரித்துக் கொண்டு சென்றார். இளந்தத்தனாரை ஒற்றனென்று பற்றிச் சிறையில் வைத்திருக்கும் செய்தியைக் கேள்வியுற்றார். புலவருக்குத் தீங்கு இழைக்குமளவுக்கு மன்னன் துணிந்துவிட்டதை எண்ணி வருந்தினர். இதுமட்டுமன்று; அரண்மனையை அடைந்தபோது அவர் அறிந்த செய்தி அவரைக் கலக்கிவிட்டது. புலவர் இளந்தத்தனாரைக் கொல்லும்படி நெடுங்கிள்ளி கட்டளையிட்டு விட்டானாம். அவர் துடிதுடித்துப் போனார். யாரையும் எதையும் சட்டை செய்யாமல் விரைந்து அரண்மனைக்குள்ளே சென்றார். அவரை அறியாதவர்கள் யாரும் அங்கே இல்லை; அவரை மதிக்காதவர்களும் இல்லை. அவர் வந்த செய்தி எங்கும் பரவிவிட்டது.

நேரே நெடுங்கிள்ளியிடம் சென்றார். அவருக்குச் சினம் உண்டாவது அரிது. ஆயினும் இப்போது கோபம் உண்டாகியிருந்தது. படபடப்புடன் பேசினார்: “அரசே! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? ஏழைப் புலவன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வதென்று நினைத்துவிட்டாயா? தமிழ் நாட்டில் இதுகாறும் மன்னர்கள் செய்ய அஞ்சிய செயலைச் செய்யும் துணிவு உனக்கு எப்படி வந்தது?” என்று வேகமாகப் பேசினார்.