பக்கம்:கோவூர் கிழார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

போகும் வழி இது என்று கூறுவதாகப் பாடுவது ஒரு வகைப் பாட்டு. இத்தகைய பாடலைப் பாணாற்றுப் படை என்று சொல்வார்கள். கோவூர் கிழார் பாடியதும் பாணாற்றுப் படையாக அமைந்ததே. பாணனுடைய வறிய நிலையையும், அவன் தன்னுடைய கலையின் அருமையை அறிந்து பாராட்டுவாரைத் தேடி அலைவதையும் அதில் கூறியிருக்கிறார்.

“சுற்றத்தாரின் கடுமையான பசியைத் தீர்ப்பவரைக் காணாமல் அலைகிற பாணனே! இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் கலையை உணர்ந்து இன்புற்றுப் பரிசில்களை வழங்கும் வள்ளல் ஒருவன் இருக்கிறான். அவனிடம் செல். சோழ நாட்டில் உறையூரில் அந்த வள்ளலாகிய நலங்கிள்ளி இருக்கிறான். நீ அவனிடம் செல்வாயானால் இனியும் வேறு ஒருவருடைய வாசலை மிதிக்க வேண்டாதபடி உனக்கு நிறையப் பரிசில்களை வழங்குவான். பிறர் வாசலை நீ அடியோடு மறந்தே போய் விடுவாய்” என்ற பொருளையுடையது அந்தப் பாடல்.

பொருநன் ஒருவன் பாடியதாக ஒரு பாட்டைப் பாடினார். அதில் அந்தப் பொருநன், சோழநாட்டில் உள்ள பெருவீரனும், அசைகின்ற பிடரி மயிரை அணிந்த குதிரையையுடையவனுமாகிய நலங்கிள்ளி விரும்பிப் பாதுகாக்கும் பொருநர் நாங்கள். நாங்கள் வேறு யாரையும் பாடிப் பரிசில் பெற விரும்பமாட்டோம். அவனையே பாடுவோம். அவன் முயற்சிகள் வாழட்டும்” என்று கூறுவதாகச் சொல்லியிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/73&oldid=1111107" இலிருந்து மீள்விக்கப்பட்டது