பக்கம்:கோவூர் கிழார்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அவர்கள் வெவ்வேறு காலத்தில் இருந்தவர்கள். அவர்களுடைய வள்ளன்மை மிகச் சிறந்ததாக இருந்தமையால் அவர்களை ஒருங்கே சேர்த்துச் சொல்வது பிற்காலத்தில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஒருவன். காரி என்றாலே அவனைத்தான் குறிக்கும்.

காரி திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்த குறுநில மன்னன். பெரு வீரன். தன்னிடம் எது கிடைத்தாலும் புலவர்களுக்கு வாரிக் கொடுக்கும் வள்ளல். அவனிடம் இருந்த படை சிறிதேயானாலும் பேராற்றலுடைய வீரர்கள் அப்படையில் இருந்தார்கள். காரியின் படைத் தலைமையில் அந்த வீரர்கள் எவ்வளவு பெரிய செயலையும் செய்யும் ஆற்றலைப் படைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டு மூவேந்தர்கள் போர் செய்யும் காலத்தில் மலையமான் திருமுடிக்காரியைத் தமக்குத் துணையாக வரவேண்டுமென்று வேண்டிக் கொள்வார்கள். கெஞ்சிக் கேட்பார்கள். அவன் யாருக்குத் துணையாகச் செல்கிறானோ அவ் வேந்தன் உறுதியாக வெற்றி பெறுவான். அவன் துணை செய்தமையால் வெற்றி உண்டான போர்கள் பல. இதனால் காரியின் பெருமை எங்கும் பரவியது. அவனைத் துணையாகக் கொள்ளும் அரசர்கள் தங்கள் பேற்றை எண்ணி மகிழ்ந்தார்கள். ஆனால் பகையரசர்களோ அவனே நினைத்தாலே நடுங்கினார்கள். சோழனானாலும் சரி, சேர பாண்டியர்களானுலும் சரி, அவன் தம் பகை