3
நீர் வளத்தையும் நில வளத்தையும் புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.”
“வளம் சிறந்த சோழ நாட்டில் நாம் பிறந்ததற்காகப் பெருமிதம் அடையத்தான் வேண்டும்.”
“அதற்காக நான் சொல்ல வரவில்லை. இத்தகைய நாட்டைக் காக்கும் கடமையை மேற் கொள்ளும் மன்னன் அறிவும் ஆற்றலும் உடையவனாக இருக்க வேண்டும் அல்லவா?”
“சோழர் குலத்தில் உதிக்கும் யாருமே ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள். சில பேர் சில சமயங்களில் மக்களின் அன்புக்கு உரியவர்களாக இராமற் போனதுண்டு. ஆனால் பெரும்பாலும் சோழ மன்னர்கள் குடி மக்களின் நன்மையையே தம்முடைய நன்மையாக எண்ணி ஆவன செய்து வருவார்கள். இப்போது மன்னனாக வந்திருக்கும் நலங்கிள்ளியும் சோழ குலத்தின் பெருமையைப் பாதுகாத்துப் புகழ் பெறுவான் என்றே நினைக்கிறேன்.”
“அரசன் எவ்வளவு ஆற்றல் உடையவனானாலும் அவனுக்கு அமைகின்ற அமைச்சர்கள் தக்கவர்களாக இருக்க வேண்டும். அரசனுக்கு வழி காட்டும் அறிவும் அநுபவமும் உள்ளவர்கள் அமைச்சர்களாக இருந்தால், ஆட்சி நன்றாக நடைபெறும். குடிமக்கள் அந்த ஆட்சியின்கீழ் நன்மையை அடைவார்கள்.”
இவ்வாறு சோழ நாட்டில் பலருக்கு அரசனைப் பற்றிய ஐயம் இருந்து வந்தது. இளமைப் பிராயம்