உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோவூர் கிழார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

அவனால் விளையும் அச்சம் இல்லையாயிற்று என்று மகிழ்ந்த மன்னர்களே பலர். ஏனெனில் அவன் இன்னாருக்குத்தான் துணையாக நிற்பான் என்ற வரையறை இல்லை. நீதி உள்ள இடத்தில் அவன் இருப்பான். போர் புரியப் புகும் மன்னர்கள் யாவரும் நீதி வழியில் நிற்பார்களா? நின்றால் போர் என்பதே உலகில் நிகழாதே நீதிவழி நிற்பார் சிலராகவும், நீதியைப் புறக்கணிப்பார் பலராகவும் இருப்பதுதான் அரச குலத்தின் இயல்பு. அதனால் காரியின் மறைவு கேட்டு மகிழ்ந்த மன்னர்கள் பலர்.

புலவர்களோ தாயை இழந்த பிள்ளைகளைப் போன்ற துயரத்தை அடைந்தனர். எல்லாப் புலவர்களுமே அவனுடைய வள்ளன்மையை உணர்ந்தவர்கள். அவன் இறந்தாலும் புலவர்களின் நாவில் இறவாமல் வாழ்ந்தான்.

மலையமான் இறந்த செய்தி கிள்ளிவளவனுக்குத் தெரிந்தது. அவன் உவகை பெற்றான். ‘இனிமேல் அரசர்கள் தங்கள் படைப் பலத்தை நம்பி வாழலாம். அந்தப் படைப் பலத்துக்கு ஏற்றபடி வெற்றி தோல்விகளை அடையலாம்’ என்று நினைத்தான். மலையமானைப் போன்றவர்கள் வேறு யாரும் இல்லை. அதனால் மலையமானால் வேந்தர்கள் நடுநடுங்கிக்கொண்டிருந்த நிலையும் ஒழிந்தது” என்று தன் அமைச்சர்களிடம் சொன்னான். அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு ஓர் ஐயம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/80&oldid=1111121" இலிருந்து மீள்விக்கப்பட்டது