பக்கம்:கோவூர் கிழார்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

செயலை உங்கள் குல வரலாற்றின் முதலிலே வைத்துச் சான்றோர்கள் பேசுகிறார்கள். இதை நீ நன்றாக நினைவிலே இருத்திக்கொள். இனி, இவர்களைப்பற்றிச் சொல்கிறேன். இவர்கள் உன் நாட்டுக்குக் கேடு சூழ்ந்தவர்கள் குடியில் வந்தவர்கள் அல்லர். அறிவையே நிலமாகக் கொண்டு புலமை வித்தகத்தையே உழவாகச் செய்து பிழைக்கிற புலவர்களுக்கு வறுமை உண்டானால் அதற்காக இரங்கி, தமக்குக் கிடைத்ததை அவர்களுக்கும் வழங்கிப் பின்பு எஞ்சியிருந்தால் உண்ணும் வள்ளல்களின் குடி இவர்கள் குடி. இவர்களுடைய தண்ணிய நிழலில் புலவர் உலகம் இன்பம் கண்டு வந்தது.”

கிள்ளிவளவன் மனத்தில் இந்தப் பேச்சினூடே மறைந்திருக்கும் குறிப்பு எதிரொலி செய்தது. ‘தங்கள் குடை நிழலின் கீழே உலகத்தை வைத்துக் காக்கிறோம் என்று இறுமாந்திருக்கும் பேரரசர்களால் புலவர்கள் வாழவில்லை. மலையமான் திருமுடிக்காரி போன்ற வள்ளல்களால் தான் புலவர்கள் வாழ்கிறார்கள். அவர் குடியைப் பகைத்தால் புலவர் உலகமே வசை பாடும்’ என்று கோவூர் கிழார் சொல்லாமற் சொல்வதாக எண்ணினான். அவன் அகக் கண்ணின் முன்னே பல புலவர்கள் நின்றர்கள். “நீ கொடியவன்; நீ கொலையாளி; நீ குழந்தைக் கொலை புரிபவன்” என்று ஆளுக்கு ஒரு குரலில் உரத்துக் கடவுவதாகக் கற்பனை செய்தான். அவன் உடம்பு நடுங்கியது.

6