பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 55
 


தீர்த்துவிடுவார்கள். அதாவது:- ஆய்ந்தோய்ந்து பாராதவன் தான் சாகக் கடவதென்னும் முதுமொழி பலிக்க சிதம்பரம்பிள்ளை அவர்களும், சுப்பிரமணிய சிவா அவர்களும் தாங்கள் எடுத்துள்ள கப்பல் வியாபார விருத்தியையும், கைத்தொழில் விருத்தியையும் எவ்வகையாரைக்கொண்டு எவ்வழியிற் சீர்படுத்தலாம் என்பதை உணராமலும் எவனோ ஒருவன் தங்கள் வியாபாரங்களுக்கு எதிரிடையான சத்துருவெனத் தோன்றுவனாயின் அவனுக்குத் தக்கமித்துருவைக் கொண்டு தங்கள் வியாபாரங்களை செவ்வை செய்துக்கொள்ளாமலும் தாங்கள் எடுத்துள்ள வியாபாரங்களில் உண்டாகும் நஷ்டங்களுக்கு ஏதுக்கள் எவை என்று உணராமலும் ஏதுக்கள் தோன்றிடினும் சாதுவில் நின்று அவரவர்கள் கெடுவெண்ணப் போக்குகளையும் நல்லெண்ண நோக்குகளையும் நன்காராய்ந்து அதிருஷ்டம் காணுமாயின் அவற்றை அடியோடு விடுத்து இலாபத்தைப் பெறக்கூடிய வேறு வியாபாரத்தைத் தொடுத்து விருத்தியடைய வேண்டியதே விவேகிகளின் முயற்சியாகும்.

அங்ஙனமின்றி அந்தணனுக்கு ஞானத்தில் நோக்கமும், அரசனுக்கு ஆளுகையில் நோக்கமும் வாணிபனுக்குப் பொருளில் நோக்கமும், வேளாளனுக்கு பூமியில் நோக்கமுங்கொண்டு அவரவர்கள் காரியங்களை ஆய்ந்தோய்ந்து நடத்துவார்கள். இவர்களோ வாணிபர்கள் என வெளிவந்து தங்கள் வியாபார விருத்தியை நாடாது அரசாங்கத்தோர் மீது விரோத விருத்தியை நாடி வீண் கூட்டங்களைக்கூடி வாயில் வந்தததைப்பாடி மாளா துக்கத்தைத் தேடிக்கொண்டார்கள்.

மாளா துக்கத்திற்கு இவர்களாயதுமன்றி மனைவி மக்களையும் இனிய நேயர்களையும் துக்கத்திற்கு ஆளாக்கிவிட்டார்கள்.

தங்கள் சுதேசத்திற்காகப் பாடுபடுவோரும் சீர்திருத்தக்காரர்களுமானவர்கள் செய்யுஞ் செயல்களால் தாங்கள் சுகமடைவதுமன்றி தன் மனைவி மக்களும் நேயர்களுந் தேசத்தோருஞ் சுகமடைதல் வேண்டும்.

தானுந் தன் மனைவி மக்களும் நேயர்களுஞ் சுகமற்று துக்கத்தை அடைவார்களாயின் இஃது விவேகிகளின் சீர்திருத்தமாமோ, ஆகாவாம்.

சுதேசிகள் சுதேசிகளுக்காகப் பாடுபடுகின்றார்கள். நாம் கவலைப்பட வேண்டுவதில்லை என்று இரடிவிழுந்தாலும் அதுவும் ஓர் கிரடியென்று சொல்லித்திரிகின்றார்கள். அது பொருந்தாவாம்.

இவ்விருவரை மட்டிலும் சுதேசிகள் என்றால் இவர்கள் வியாஜ்ஜியத்தில் அஸ்ஸர்களாக உட்கார்ந்து இவ்விருவரும் குற்றவாளிகள் என்றே செப்பிய மிஸ்டர் அனந்தநாராயண ஐயரும், மிஸ்டர் இராமச்சந்திர ஐயரும் சுதேசிகளன்றோ. அவ்விருவருக்கும் இச்சுதேசியப் பிரசங்கஞ் செய்யத் தெரியாதோ, தெரியும்.

அவலை நினைந்து உரலையிடிப்பதுபோல் இரஜத்துவேஷ அதனப்பிரசங்கஞ் செய்வதினால் புதின சட்டங்கள் தோன்றும் என்றவர்களுக்குத் தெரியும். ஆதலின் சுதேசிகளாகுந் தன்னவர் என்றும் பரதேசிகளாகும் அன்னியர் என்றும் பட்சபாதம் பாராது இருவர்கள் செய்கைகளும் குற்றங்குற்றமென்றே மத்திய நியாயம் கூறிவிட்டார்கள்.

- 2:5; சூலை 15, 1908 -

நமதன்பர் சிதம்பரம் பிள்ளையவர்கள் கப்பல் வியாபாரக் கலகத்திற்கு முன்பு சுதேச விருத்தியைப் பற்றியேனும் சுதேசக் குடிகளின் விருத்தியைப்பற்றியேனும் ஓர் முயற்சி எடுத்து இருப்பாரா, இல்லை. தன் வியாபாரத்தில் உண்டாகிய விரோதத்தையே ஆதாரமாகக் கொண்டு வீணே ராஜாங்கத் துவேஷியாய் நிந்திக்க ஏற்பட்டதின்பேரில் இராஜாங்கத்தார் இவர்மீது சிந்திக்க ஏற்பட்டார்கள். அத்தகைய சிந்தனையால் இவர் செய்துவந்தப் பிரசங்கங்களில் குடிகள் யாவரும் இராஜ விரோதமுற்று வீணே கெடுவதை உணர்ந்து அவற்றை அடக்கத்தக்க ஏதுவைத் தேடினார்கள்.

இதுவுமன்றி சுப்பிரமணிய சிவா என்பவர் தான் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தான் சன்னியாசி என்றும் முத்தியடையும் மார்க்கங்களைப்