பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


சுதேச உணர்ச்சி வந்துவிட்டபடியால் சுதேசிகளை இனி வருத்த மாட்டார்கள். சுயராட்சியமும் செவ்வனே செய்வார் என்பாரும் உண்டு.

தற்காலம் அந்தஸ்திற்கு வந்துள்ளக் குடிகள் சுதேச எழியக் குடிகளை வருத்தாமல் சுயராட்சியஞ் செய்வரோ, ஒருக்காலுஞ் செய்யமாட்டார்கள். பரோபகார அனுபவமும், இராஜ பக்த்தியும், வல்லபமும் இவர்களுக்குக் கிடையாது.

காரணம் - அந்தந்த டிஸ்டிரிக்ட்டுகளிலுள்ள ஆலய வழக்குகளை அவர்களுக்குள்ளே தீர்த்துக் கொள்ளத்தக்க ஆலோசனையும் சக்த்தியும் இல்லாமல் ஆங்கிலேய நீதியதிபர்களைக் கொண்டே நியாயம் தீர்த்துக் கொள்ளுகின்றார்கள்.

- 2:12; செப்டம்பர் 2, 1908 -

இதன் அனுபவத்தை அறிய வேண்டுமாயின் காஞ்சிபுரத்தில் சுதேசிகளுக்குள் நேரிட்ட வடகலை தென்கலை கலகத்தை ஏதேனும் தங்களுக்குள் அடக்கி ஆண்டுக் கொண்டார்களா.

திரிசிரபுறத்தில் சுதேசிகளுக்குள் நேரிட்ட வடகலை தென்கலை வழக்கை ஏதேனும் தங்களுக்குள் அடக்கி ஆண்டுக் கொண்டார்களா, இல்லையே.

இச் சென்னையிலுள்ள சுதேசிகளின் ஆலய தர்மகர்த்தாக்கள் நியமன வழக்கை ஏதேனுந் தங்களுக்குள் அடக்கி ஆண்டு கொண்டார்களா, இல்லையே.

இத்தகைய சொற்ப ஆலய வழக்குகளைத் தங்களுக்குள் அடக்கியாள சக்த்தியற்றவர்கள் ஓர் தேசத்தைக் கட்டியாளுவோம் என வெளிவந்தது விந்தையேயாம்

விந்தையிலும் நிலையற்ற விந்தை என்று விளங்குகின்றது. அதாவது, தற்காலம் இத்தேசத்திலுள்ள ஓர் மனிதனை நோக்கி ஐயா, நீவிர் யாவருடைய ஆளுகையில் இருக்கின்றீர் என்றால் அவன் கூசாமல் நான் ஏழாவது எட்வர்ட் சக்கிரவர்த்தியின் ஆளுகையில் இருக்கின்றேன் என்பான்.

இந்த சுதேசிகள் வசம் சுயராட்சியம் அளித்த பின்னர் ஒருவனை நோக்கி நீவிர் யாவராளுகையில் இருக்கின்றீர் என்றால் யாது கூறுவான். நாங்களே ஆண்டுக் கொள்ளுகிறோம் என்பனோ, அன்றேல் ஆளுகைக்கதிபராய் எங்களுக்குள்ள சுதேசிகளில் ஒருவரைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவோம் என்பார் போலும்.

சுதேசிகளின் சொற்பக் கோவில்களுக்கு ஓர் தருமகர்த்தாவைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவதற்குள்ளாக உனக்கெனக் என்னும் உள் விரோதங்கள் உண்டாய் பெரும்போர் பிறந்து பிரிட்டிஷ் நியாயாதிபதிகளால் தருமக்கர்த்தாக்களை நியமிப்பது அநுபவத்தில் இருக்க சுதேசிய சுயராட்சியத்திற்கு ஒருவரை நியமிக்குங்கால் உண்டாகுங் கலகங்களை நிவர்த்திக்க யாரிடஞ் சென்று தீர்த்துக் கொள்ளுவார்களோ விளங்கவில்லை.

சுதேசிய சுயராட்சியத்தில் அவ்வகைக்கலகம் நேரிடுமாயின் பிரிட்டிஷ் அதிபர்களைத் தருவித்தே தீர்த்துக் கொள்ளுவோம் என்பாராயின் காலத்திற்குக் காலம் அவர்களே வந்து ஒவ்வொருவரை நியமிப்பதைப் பார்க்கினும் அவர்களேயிருந்து ஆளுகைச் செய்வது அழகா என்பதை சகலரும் அறிந்துக் கொள்ள வேண்டியதேயாகும்.

இத்தகைய சுதேசக் குடிகளின் குணாகுணங்களையும் ஆங்கிலேய அரசர்களின் ஆளுகைகளையும் தேற விசாரியாது காக்கை ஒன்று காகா என்றவுடன் காரமின்றி மற்றக் காகங்கள் யாவும் கா- கா சென்று கலந்து கூச்சலிடுவது போல் சுதேசியம் என்று ஒருவர் சொன்னவுடன் அதன் கருத்து இன்னது இனியதென்று உணராது எல்லோரும் கூடிக் கொண்டு சுதேசியம் சுதேசியம் எனக் கூச்சலிடுவது அழகின்மையே ஆகும்.

நமது தேசத்தை சீருஞ் சிறப்பும் பெறச் செய்வது வித்தியாவிருத்தியின் கூச்சலும், விவேக விருத்தியின் கூச்சலும், ஈகை விருத்தியின் கூச்சலும், சன்மார்க்க விருத்தியின் கூச்சலுமேயாம்.