பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


களையும் கார்த்து தங்களுயிர்களையும் கொடுத்து உதிரமும் சிந்தப்பாடுட்டதுமன்றி வைத்திய சாலைகளிலுள்ள சகலசாதி வியாதியஸ்தர்களையும் அன்புடன் ஆதரித்து வியாதிகளைப் பரிகரித்துவந்தபடியால் சகலராலும் மதிக்க நாகரீகமும் சுகமும் பெற்றிருந்தார்கள்.

அவர்கள் சுகத்தையும், நாகரீகத்தையும், நன்மதிப்பையும் பார்த்துவந்த சாதியாசாரமுடையவர்கள் மனம் சகியாமல் பலசாதி பிணங்களை அறுப்பதால் சாதி கெட்டுப்போம். பற்பலசாதியோரைத் தொடலால் சாதி கெட்டுப்போம் என்று விலகினின்ற பிராமணமதஸ்தர்கள் யாவரும் வைத்தியசாலை உத்தியோகங்களில் வந்துசேர்ந்துவிட்டார்கள். அதினால் இத்தேச சீர்திருத்த காலங்களிலும், யுத்தகாலங்களிலும் பாடுபட்ட சாதிபேதமற்ற திராவிடர்களுக்கு வைத்தியசாலை உத்தியோகமுங் கிடைப்பதரிதாகிவிட்டது.

ஈதன்றி பிரிட்டிஷ் துரைத்தனத்தில் பரோபகார மிஷநெரிகளால் ஏற்படுத்திய கலாசாலைகளில் பிராமணமதஸ்தர்கள் மட்டிலும் வாசிக்கலாம் மற்றவர்களைச் சேர்க்கலாகாதென்று தடுத்து சாதிபேதமற்ற திராவிடர்களை பறையர்கள் என்றும், தாழ்ந்த சாதிகள் என்றும் கூறி கல்வியும் கற்கவிடாமல் பரோபகார கல்வி கற்பிக்கும் மேலோர் மனதையும் கெடுத்துக் கொண்டே வந்தார்கள்.

இத்தகைய நீச்சகுணங்களையும் பொறாமெய் செயல்களையும் நாளுக்குநாள் பார்த்துவந்த மேலோர்களாகும் ஆங்கிலேயர்கள் கருணைகூர்ந்து சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள்ள இடுக்கண்களையும், துன்பங்களையும் அமேரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் விளக்கி சில பொருள் சேகரித்து இவர்களுக்கென்று பிரத்தியேக கலாசாலைகளை நியமித்து கல்விகற்பிக்குங்கால், இவர்கள் பறையர்கள் தாழ்ந்தசாதியார் எங்கள் குலத்துப் பிள்ளைகளுடன் உட்காரலாகாது, தீண்டலாகாது, நெருங்கி நிற்கலாகாது என்று ஏழைகளின் கல்விவிருத்திக்கு இடுக்கண் செய்து வந்த வகுப்பினரே தற்கால ஏழைப் பிள்ளைகள் கலாசாலைகளுக்கு உபாத்திமார்களாகவும் பார்வையோர்களாகவும் அமர்ந்து சேரிகளிலுள்ளப் பாடசாலைகளில் தாங்கள் கொண்டுவரும் புசிப்பை உண்ணவும் சலபானம் அருந்தவும் இருக்கின்றார்கள்.

- 2:14; செப்டம்பர் 16, 1908 -

கிறிஸ்துமத மிஷநெரிமார்கள் இத்தேசத்தில் வந்து தங்கள் மதத்தைப் பரவச் செய்தபோது சாதிபேதமுடைய பிராமண மதஸ்தர்கள் அவர்களை இழிவாகக் கூறி அவர்கள் மதம் பரவக்கூடா இடுக்கங்களைச் செய்துவந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ யாதொரு களங்கமுமின்றி அம்மதத்துள் பிரவேசித்து அந்த துரைமக்கள் கருணையால் பி.ஏ. எம்.ஏ., முதலிய கவுரதா பட்டங்களும் பெற்று நாகரீகமுற்று காடு மலை வனம் வனாந்திரங்களைச் சுற்றி கிறீஸ்துமத வாக்கியங்களைப் போதித்து எங்கும் அம்மதத்தைப் பரவச் செய்து வந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களால் கிறீஸ்துமதம் பரவியதுமன்றி சாதிபேதத்தால் தங்களுக்கு உண்டாயிருந்த சில இடுக்கங்களும் நீங்கி சுகவாழ்க்கையைப் பெற்றார்கள்.

அவர்கள் ககவாழ்க்கையைக் கண்ணால் பார்க்கப்போறாத சாதிபேதமுடைய பிராமணமதஸ்தர்கள் கிறீஸ்துமத்தில் வந்து சேர்ந்து சாதியையும் வைத்துக் கொண்டு ஆதியில் இக்கிறிஸ்து மதத்தை கற்களின் அடியும், தடியடியும், சாணங்களின் அடியும் பட்டு விடாமுயற்சியால் பரவச்செய்துவந்த சாதிபேதமற்ற திராவிடர்களுக்கு தற்காலம் அம்மதத்தில் யாதொரு சுகமும் இல்லாமல் போய்விட்டது.

இத்தகைய அனுபவங்களால் சாதிபேதமுள்ளக் கூட்டத்தார்வசம் சுயராட்சியங் கிடைக்குமாயின் சாதிபேதமற்ற திராவிடர்களையே முன்பு கெடுத்துப் பாழாக்கிப் பதங்குலையச் செய்துவிடுவார்கள் என்பதற்கு ஆட்சேபமில்லை.