பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 75
 


இத்தியாதி காரியங்களைத் தெரிந்தவரும், பி.ஏ.பி.எல், கெளரதா பட்டம் பெற்றவரும், தத்துவ ஆராய்ச்சியில் மிகுத்தவருமாகிய இவருக்கே பறைச்சேரி மீதுள்ள பழய பொறாமெய் விடாமல் இருக்குமாயின் மற்றும் கல்வி அற்றவர்களுக்கு எத்தகைய பொறாமெய் இருக்கும் என்பதை எளிதில் அறிந்துக் கொள்ள வேண்டியதேயாம்.

சொற்ப முநிசிபல் அதிகாரம் கொடுத்தவுடன் பறைச்சேரி மீதுள்ள பொறாமெய் விடாதவர்கள் வசம் சுயராட்சியம் கொடுத்துவிட்டால் பறைச்சேரிகளும், பறையர்கள் என அழைக்கப்படுகிறவர்களும் பெயர் ஊரில்லாமல் பரக்கவேண்டியதேயாகும்.

ஆதலின் சாதிபேதமற்ற திராவிடர்களே அதிசீக்கிரம் உங்களுடைய சீர்திருத்தக் கூட்டத்தை வலு செய்து கிராமங்கள் தோரும் வியாபாரக் கூட்டங்களை நிலைநாட்டுங்கள். கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனமே இவ்விடம் நீடித்து நிலைக்க வழிதேடுங்கள், வழிதேடுங்கள்.

உன்சாமிப் பெரிது என்சாமிப் பெரிதென்னும் மதகர்வங்கொண்டு சுஜாதி அபிமானத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

தற்காலம் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் இராஜாங்க துரைசாமிகள் இருக்கும் வரையில் தான் நிரைசாமி தாண்டவமாடும். துரைசாமிகள் போய்விட்டாலோ பழய ப-சாமி-ப-சாமி என்று பதம் குலைந்து பல்லிளிக்க நேரிடும். அக்காலத்தில் குறுக்குப்பூச்கவோரெல்லாம் அரகரா அரிசி போடுங்கோள் என்றும், நெடுக்குப் பூச்சுவோர் எல்லாம் கோவிந்தா கோபாளம் போடுங்கோள் என்றும் வெளிவருவீர்களாயின் உங்களுக்கும் விஷ்ணுவுண்டோ, உங்களுக்கும் சிவனுண்டோ என்று ஊருக்குப் புறம்பே தள்ளி உள்ளதையும் ஓட்டிவிடுவார்கள் உறுதியாய் நம்புங்கள். நாகர்கோவில் புராடெஸ்டாண்ட கிறிஸ்தவக் கூட்டத்தாருக்கு நன்றியறிந்த வந்தனம் கூறுங்கள், வந்தனம் கூறுங்கள். அவர்கள் விடாமுயற்சியாகக் கூடிவரும் இராஜவிசுவாசக் கூட்டத்தைப் பாருங்கள்.

- 2:15; செப்டம்பர் 23 -


20. காங்கிரஸ் கமிட்டியின் காலாகோலம்

இந்தியன் நாஷனல் காங்கிரசெனப் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தார் தங்கள் வருடாந்திரக் கூட்டத்தை வருகிற டிசம்பர் மீ விடுமுறைகாலத்தில் இச்சென்னையில் வைக்க வேண்டும் என்று வேணமுயற்சிகளைச் செய்து வருகின்றார்கள்.

இது மத்தியில் நமது சென்னையில் கல்வியிலும், செல்வத்திலும் மிகுந்த பெருந்தொகையாளர் ஒன்றுகூடி அக்காங்கிரஸ் கூட்டம் இச்சென்னையில் நடைபெறக் கூடாதென்று ஆட்சேபனைச் செய்திருக்கின்றார்கள்.

இத்தகைய ஆட்சேபனையை மீறி செய்வார்களானால் சென்றவருஷ காங்கிரசில் நடந்த செய்திபோலாகும் போலும்.

ஆதலின் நமது காங்கிரஸ் கமிட்டியார் கோதானம், பூதானம், தனதானங்களைவிட்டு நிதானத்தினின்று காலமறிந்து காரியாதிகளை நடத்தல் வேண்டும்.

இஃது யதார்த்த நாஷனல் காங்கிரஸ் கூட்டமாயிருக்குமாயின் இத்தகைய இடுக்கண்கள் நேரிட்டிரா. யதார்த்த நாஷனல் என்பதையும் யதார்த்த நாஷனல் அல்ல என்பதை அடியில் வரும் விஷயங்களால் எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.

- 2:17; அக்டோபர் 7, 1908

-

இந்த நாஷனல் காங்கிரசென்னும் கூட்டத்தார் ஆதியில் சேருங்கால் இக் கூட்டமானது சாதிபேத மதபேதமின்றி சகல சாதியோருக்குள்ளக் குறைகளையும் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு விளக்கி அக்குறைகளை நீக்குமென்று வெளி வந்தார்கள்.