பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 81
 


பூமிகளைக் கொடுத்து ஆதரிக்கவேண்டும் என்று கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவி கூறுபத்திரம் அதாவது (ரெக்கமென்டு) பத்திரமேனும் கொடுக்கலாகாதோ என்று கோரினோம்.

உடனே அவ்விடம் வந்திருந்த எல்லூர் பிரதிநிதி ம-அ-அ-ஸ்ரீ சங்கறமென்பவர் எழுந்து இக்குலத்தோரின் விருத்தி குறைகளையும், கஷ்டநிஷ்டூரங்களை சபையோருக்கு விளக்கி இவர்கள் இவ்விந்துதேசத்தின் முதுகெலும்பு போல் சகல சாதியோருக்கும் உதவியாக இருக்கின்றபடியால் இவர்களுக்கு வேண உபகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அவற்றை வினவிய ம-அ-அ-ஸ்ரீ இராஜா சர்சவலை இராமசுவாமி முதலியாரவர்கள் எழுந்து கலாசாலை விஷயத்திலும், பூமியின் விஷயத்திலும் இராஜாங்கத்தோருக்கு (ரெக்கமன்டு) பத்திரம் அனுப்பவேண்டும் என்று ம-அ-அ-ஸ்ரீ சங்கறமவர்களிடத்தில் முடிவு செய்ய அவர்களும் அவற்றை ஆமோதிக்க அவர் ஆமோதிப்புக்கு உதவியாய் என் பெயரையும் சேர்த்து பெருந்தொகையார் சம்மதத்திற்கு நிறுத்தினார்கள்.

அவ்வகை நிறுத்திய மூன்றாம் நாள் அடுத்த சங்கதிகள் ஒவ்வொன்றையும் பெருந்தொகையார் சம்மதத்தில் விட்டு முடிவுசெய்துவருங்கால் இவ்வெழிய குலத்தோர் சங்கதிவந்தது. அதாவது - கல்வி சாலைகளும், பூமியும் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றவர் ம-அ-அ-ஸ்ரீ இராஜசர் சவலை இராமசுவாமி முதலியாரவர்கள். அதனை ஆமோதித்தவர் ம-அ-அ-ஸ்ரீ எல்லூர் சங்கறமென்பவர். அவர் ஆமோதித்த பிறகு பிரதி ஆமோதகர் க. அயோத்திதாச பண்டிதர் என்று கூறி இதன்விஷயம் சகலருக்கும் சம்மதந்தானோ என்று கேட்டதின்பேரில் பெருந்தொகையார் சம்மதம் இக்குலத்தாருக்கான உபகாரஞ் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்து நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோருக்கு எழுதி அவர்களும் இதங்கியக் கோரிக்கையை நிறைவேற்றி விட்டார்கள்.

அதினால் இத்தென்னிந்தியாவிலுள்ள குக்கிராமமெங்கணும் கலாசாலைகள் ஏற்படுத்தப்பட்டதன்றி சிற்சில இடங்களில் பூமிகளுங் கொடுக்கப்பெற்று வருகின்றார்கள்.

இத்தகைய இருதருமத்தில் வேண்டிய பூமிகளைக் கேழ்க்கும் இடங்களில் அண்டபாத்திய இடஞ்சலும், கல்விவிருத்தியில் அன்னியசாதி உபாத்திமார்கள் அலட்சிய போதனா செய்கையும் இவ்விருதருமங்களையும் விருத்தி பெறாமல் செய்துவருகின்றது. ஆதலின் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரை வினவியுள்ள பத்துக் கோரிக்கைகளும் நிறைவேறுமாயின் இக்குலத்தோரின் சகல இடுக்கங்களும் நீங்கி சுகமடைவார்கள்.

- 2:19: அக்டோபர் 21, 1908 -


23. அரிசி ரூபாயிற்கு 4-படியா

சுயராட்சியம் விரும்பும் சுதேசிகளே! இராஜாங்கசமத்துவம் விரும்பும் சாமர்த்தியர்களே! சற்று கண்ணோக்குங்கள்.

பூர்வப் பழமொழி, ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலென்றும், தற்கால பழமொழியோ சுயராட்சியமும், சுதேசியமும் சோற்றில் இருக்கின்றதென்கின்றார்கள்.

ஆதலின் சுவற்றிற்கு மண்ணறைந்து உருபடுத்துதல்போல் தேகங்களுக்கு சோற்றையூட்டி உருப்படுத்தவேண்டியது இயல்பாம்.

இவ்வகை ஊட்டுஞ் சோற்றுக்கு அரிசியே காரணமாகும். அவ்வரிசியோ ஒரு ரூபாயிற்கு நான்குபடி விற்கின்றார்கள்.

சுதேசிகளோ பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் கருணையினால் மாதம் ஒன்றுக்கு நாலாயிரம், மூவாயிரம், ஈராயிரம், ஓராயிரம், ஐந்நூறு, நாநூறு, முந்நூறு, இருநூரென்னும் சம்பளங்களைப் பெற்றுக்கொண்டு கடைக்காரர்கள் ரூபா ஒன்றுக்கு நான்கு படி அரிசி விற்றால் என்ன இரண்டுபடி அரிசி விற்றால் என்ன என்னும் சுகபோகத்தில் இருக்கின்றார்கள்.