பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


டிஸ்ட்டிரிக்கட்டை நான்கு பாகமாகப் பிரித்து நான்கு பிரிதிநிதிகளை நியமித்து குடிகளின் குறைவு நிறைவுகளை அறிந்து பாதுகாத்தல் சுகத்தை விளைக்குமா என்று ஆராயுங்கால் நான்கு பிரிதிநிதிகளிருந்து குடிகளின் குறைகளை அப்போதைக்கப்போதறிந்து ஆதரிப்பார்களாயின், அதிக சுகமுண்டாமென்பது அநுபவமாகும். அங்ஙனமின்றி ஒரு பெரும் டிஸ்ட்ட்டிரிக்கட்டை ஒரு பிரிதிநிதியிருந்தாளுவாராயின் குடிகளுக்குள்ளக் குறைகளை அப்போதைக்கப்போது நிவர்த்தி செய்வதற்கு இயலாது குடிகள் அல்லல்படவேண்டியதேயாகும்.

ஒரு பிரிதிநிதிப்பினும் நான்குப் பிரிதிநிதிகளைப் பெருக்குவதால் சிலவு அதிகரிக்காதோவென்பாரும் உண்டு அங்ஙனம் ஒரு பிரிதிநிதியால் பூமிகளின் விருத்திகளையும், நீர்பாய்ச்சல் விருத்திகளையும், கைத்தொழில் விருத்திகளையும் ஆராய்ச்சி செய்வதினும் நான்கு பிரிதிநிதிகள் அவரவர்கள் திக்குகளின் பூமிவிருத்தியையும், நீர்ப்பாய்ச்சலையும் விருத்தி செய்வார்களாயின் அவரவர்கட் சிலவுகளுக்கு மேற்பட்ட ஆதாயங்கள் பெருகுமன்றோ, பற்பலக் குடிகளுக்கும் அதினால் சீவன விருத்திகள் அதிகரிக்குமன்றோ.

இத்தியாதி விருத்திகளைக் கவனியாது குறைத்துக் கொண்டே போகுஞ் செயற்களை ஆராயுங்கால் தேசஞ் சீர்கெடுமேயன்றி சீர்பெறாவாம்.

தேசஞ் சீர்பெற விரும்புவோர் விருத்திகளையே கருதல்வேண்டும், வங்காளப் பிரிவினையால் தான் இத்தியாதி கலகங்கள் உண்டாதென்று கூறுங் கனவான்கள் அதன் குறைகளை விளக்கிக்காட்டுவார்களாயின் அவர்களை விவேகிகளென்றே கூறுவோம்.

அங்ஙனமின்றி சொந்தவீட்டுக்காரன் சீர்திருத்தத்தை அண்டைவீட்டுக்காரன் அலக்கழிப்பதுபோல் அரசாங்கத்தோர் சீர்திருத்தத்தின் அந்தரங்கம் அறியாதோர் வீணே பிதற்றுதல் விருதாவாவதன்றி,

- 2:25: டிசம்ப ர் 2, 1908 -

வீண்கலகங்களையும் மூட்டுவிக்கும் கதைகளென்றுங் கூறவேண்டியதாகும்.

காரணம் - இராஜாங்க சீர்திருத்தங்களிலும் தேசபிரிவினை, சேர்ப்பினைகளிலும் ஆலோசனை சங்கங்களிருந்தே காரியாதிகளை நடத்தி வருகின்றார்களன்றி வேறில்லை.

அவ்வகையுள்ள ஆலோசனை சங்கத்தோர்களுக்கு அறிவு போதாது யாங்கள்தான் அறிவுமிகுத்தவர்களென்று வெளிதோன்றி பத்திரிகைகளின் வாயலாகவும் மற்றுமிடங்களிலும் வங்காளப்பிரிவினையால்தான் வங்காளிகளுக்கு துவேஷமுண்டாதென்று கூறுங் கனவான்கள் அதனந்தரார்த்தங்களைத் தெள்ளறவிளக்கிக் காட்டுவார்களாயின் சகலரும் நன்குமதிப்பார்கள்.

வங்காளப்பிரிவினையே கலகத்திற்குக் காரணமென்போர் அதன் மூலத்தையும் அதன் பரிகரிப்பையும் விளக்குவரேல் அவர்களே மூதறிவாளராகும்.

அங்ஙனமின்றி சிலர் வங்காள இராஜ துவேஷிகளுக்கு துணை கூறுவதுபோல் வீண்வாதங்களைப் பத்திரிகைகளில் எழுதுவதும், பேசுவதும் அவலமேயாகும்.

அவ்வகைப்பேசவும், எழுதவுமுள்ள கனவான்கள் இராஜ துவேஷிகளுக்கு வேண இதங்கூறி அவர்கள் மதிமயக்கத்தை அகற்றி இராஜவிசுவாசத்தை உண்டு செய்வார்களாயின் அவர்களையே விவேகமிகுத்த மேதாவிகளென்று வணங்குவாம்.

- 2:26; டிசம்பர் 9, 1908 -


27. வங்காளிகளின் கீர்த்தி சில கங்காளிகளால் கலைதல்

பூர்வகாலத்தில் சீனராஜன், சிங்களராஜன், காம்போராஜன், வங்காள ராஜனென்பவற்றுள் வங்காளர்களைப் பற்றிய வல்லபத்தையும், மதியூகத்தையும் மிக்க மதிப்பாகக் கொண்டாடி வந்ததாக விளங்குகின்றது.