பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 97
 


இராஜ தாரியில் மலமூத்திராதிகளை விகரிப்பிக்கலாகாதென்று சட்டம் வகுத்திருக்கின்றார்கள். அந்த சட்டம் இருப்பது தெரிந்தும் தண்டனையடைவதை உணர்ந்தும் மலமூத்திராதிகளை விசுரிப்பிக்காமல் இருக்கின்றார்களோ.

அன்னியன் பொருளை அபகரிப்போனுக்கு என்ன தண்டனை என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வகையாக விதித்தும் வருகின்றார்கள் அவற்றைக் கண்டவர்களுக்கு அறிவு விளங்கி திருடாமலிருக்கின்றார்களோ.

ஒருவனை மற்றொருவன் கொலைச்செய்வானாயின் கொலையாளியைக் கொல்லவேண்டும் என்று சட்ட மேற்பட்டிருக்கின்றது. அம்மேறைக் கொன்றும் வருகின்றார்கள். அவற்றைக் காணுவோருக்கும் கேழ்ப்போருக்கும் பயமும், அறிவுந்தோன்றி கொலைபுரியாமலிருக்கின்றார்களோ இல்லையே.

இத்தகைய அனுபவக் காட்சிகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டிருந்தும் இராஜத்துவேஷ மறுப்புச்சட்டங்களை எடுத்துவிட வேண்டும் என்பது என்ன காரணமோ விளங்கவில்லை.

ஈதன்றி வங்காளம், பாம்பே முதலியாப் புறதேசங்களிலிருந்து வந்திருந்தப் பிரிதிநிதிகள் யாவரும் தேசத்தின் சீர்திருத்தங்களையும் குடிகளுக்குள்ளக் குறைகளையும் எடுத்துப்பேசியிருக்க நமது ஐயரவர்கள் மட்டிலும் சட்டத்தை எடுத்துவிடவேண்டும் என்று பிரே ரேபித்தது விந்தையேயாம்.

- 2:30; சனவரி 6, 1909 -


36. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியோருக்கு நியமிக்கப்பட்ட சங்கம்

இந்த டிசம்பர் மீ விடுமுறைகாலத்தில் சில பெரியோர்கள் கூடி இந்தியாவில் தாழ்த்தப்பட்டுள்ள சாதியோரை சீர்திருத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றார்கள்.

இவற்றுள் இயல்பாகவே அறிவின்றி தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித்தலைவர்களின் விரோதத்தினால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளதுவரையில் தாழ்த்திவருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.

அவர்கள் யாரென்பீரேல் - குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்குந் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.

சாதித்தலைவர்களாகும் வேஷபிராமணர்களால் பறையரென்றும், சாம்பாரென்றும், வலங்கையரென்றும் கூறி அவர்களை சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், அந்தஸ்தான உத்தியோகங்களில் பிரவேசிக்கவிடாமலும், ஏதோ துரை மக்கள் கருணையால் ஓர் உத்தியோகத்தைப் பெற்றுக் கொண்டபோதிலும் அதனினின்று முன்னுக்கு ஏறவிடாமலும் பலவகை இடுக்கங்களைச் செய்து தாழ்த்திக் கொண்டே வருகின்றார்கள். இவர்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று கூறலாகாது. சாதிபேதமுள்ள மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கூறல்வேண்டும்.

இவற்றுள் கூளங் குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையுஞ் சேரக்குவித்து குப்பைக் குழியென்பதுபோல் கல்வியிலும், நாகரீகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமெயிலும் மிகுத்து வேஷபிராமணர்கள் கற்பனாகதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பௌத்தர்கள் யாவரையும் பறையர், சாம்பார், வலங்கையரென்று தாழ்த்திக்கொண்டதுமன்றி சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் ஐந்தாவது சாதியென்னும் பஞ்சமசாதியென நூதனப்பெயரிட்டு மேன்மக்களாம் பௌத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சமசாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.