பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


ஓரத்தூர் கிராமத்தில் வாசஞ்செய்யும் பாப்பார்களெல்லாம் ஒன்றுகூடிக்கொண்டுப் பறையர்களென்னும் ஏழைக் குடிகளைப் பலவகைத் துன்பங்கள் செய்திருக்கின்றார்களாம்.

அவைகளை சகிக்கமுடியாமல் அக்குறைகள் யாவற்றையும் நமது ராஜாங்கத்தோருக்கு விளக்கவேண்டுமென்று கருதி யாவருங்கூடி கைச்சாத்திட்டு நமது பத்திரிகைக்கு எழுதியிருக்கின்றார்கள். அவற்றை இதனடியில் பிரசுரஞ் செய்திருக்கின்றோம். இதனைக் கண்ணுறும் கருணை தங்கிய நமது ராஜாங்கத்தார் எழியகுடிகளின்மீது இதக்கம் வைத்து இராஜாங்க யூரேஷிய அதிகாரிகளிலேனும், மகமதிய அதிகாரிகளிலேனும் ஒருவரை அனுப்பி அவற்றைத் தேறவிசாரிணைக்குக் கொண்டுவந்து அக்கிராமவாசிகளின் அக்கிரமங்களை அடக்கி ஏழைகளைப் பாதுகாப்பார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

பத்திராதிபர்

கடிதம்

நெ, 96, ஓரத்தூர் கிராமம்
ம-எம்-எம்-ஸ்ரீ,

க. அயோத்திதாஸ் பண்டிதரவர்கட்கு 96-ம் கிராமச்சேரியில் நீடூழியாய் வாசஞ்செய்யுங்குடிகள் யாவரும் தங்கள் மேலானகனத்தை வருந்தி யெழுதுவது யாதெனில்:- தங்கள் பத்திரிகையில் யாங்கள் எழுதியதை பிரசுரிக்கக் கோருகிறோம்.

மேல்கண்ட நெ96 மதுராந்தகம் தாலுக்காவைச் சேர்ந்த ஓரத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாப்பார்கள் சுமார் 27 வீட்டுக்காரர்களும் ஒன்றாய் சேர்ந்து சேரியில் வசிக்கும் 28 வீட்டுக்காரரையும் பறையர்கள் நீங்கள் எங்கள் பட்டாபூமியின் வழியாய்ப் போகப்படாதென்றும், ஏரியில் ஜலம் யாங்கள் மொள்ளக்கூடாதென்றும், அப்படி மீறி மொள்ளுபவர் குடங்களை உடைத்துவிடுவதாகவும் சொன்னதை கேட்டு சிலகாலம் பயந்து ஜலமெடுக்காமலிருந்தோம். எங்களுக்குள் சிலர் அவர்களிடந்தான் தொண்டுசெய்கிறவர்கள். ஆனதால் நாங்கள் ஞாயங்கேட்கப் போனால் எங்களை தடிகளாலும், மண்கட்டிகளாலும் அடிக்க வருகிறார்கள். கிராம கணக்கப்பிள்ளை, முன்சீப் இவர்களிடஞ் சொன்னாலும் அவர்கள் இரு தரத்தாரையும் பறையர்களுக்கு உதவியாயிருப்பதைக் கண்டால் உங்களையும் பல்வித வாதைகள் செய்வோமென்று பயமுறுத்துகிறார்கள். யாங்களோ கல்வியில்லாதவர்கள். எங்கள் பிள்ளைகள் வாசிக்கவும் பள்ளிக்கூடம் இவ்விடங் கிடையாது. அப்படியிருந்தாலும் பறையர்கள் படிக்கப்படாது. மாடுகளை காலையில் ஓட்டிக்கொண்டு போய் அவர்கள் மாட்டில் மடக்கிக்கொண்டு அதுகள் போடும் சாணத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் அந்த சாணத்தால் நாங்கள் முன்னுக்கு வந்துவிடுவோமென்னும் கெட்ட எண்ணமே தவிர மேய்காட்டில் எங்கள் மாடுகளும், ஆடுகளும் மேயக்கூடாதென்றும் காட்டில் காய்ந்தவிரகு பொருக்கி சமைக்கக் கூடாதென்றும், எங்களுக்கு ஏர்மாடுகள் இருக்கப்படாதென்றும், யாங்கள் சுத்த ஜலம் சாப்பிடக்கூடாதென்றும், வஸ்திரங்கள் சுத்தமாய் கட்டக் கூடாதென்றும், மாட்டிற்கு யாங்கள் புல் அறுக்கக்கூடாதென்றும் தடுத்து எங்கள் பயிறுகளுக்கும், ஆடுமாடுகளுக்கும் இடஞ்சல் செய்துவருகின்றார்கள். இந்தவூரில் யாங்கள் நஞ்சை, புஞ்சை மானியதீர்வை ஏறக்குறைய 100 ரூபாய் சர்க்காருக்கு செலுத்திக்கொண்டு வருகிறோம்.

நாட்டுப்புரத்தில் நாங்கள் படும்ட கஷ்டங்களை கவனிப்பார் யாருங்காணோம். சென்னையில் மாத்திரம் சுதேசிகள் சுயராட்சியங் கேட்கிறார்களே இப்பேர்கொத்த கொடும்நெஞ்சமுடையவர்களுக்கு சுயராட்சியங் கொடுத்துவிட்டால் முற்காலத்தில் எங்களை கற்காணத்திலும், கழுவிலும் ஏற்றியதாய் பெரியபுராணம் முதல் தற்கால சாட்சியிருக்கிறது.