பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


இடத்தை வடயிந்தியமென்றும் தென்னிந்தியர் வாசஞ்செய்த இடத்தை தென்னிந்திய மென்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய புத்ததன்ம சார்பினருக்குரிய இந்தியரென்னும் பெயரை பொதுவாக, சகல மதஸ்தர்களும் ஏற்றுக்கொண்டு தங்களை இந்தியர்களென்று கூறுங்கால் மகமதியர்களையும் ஏன் இந்தியர்களென்று கூறப்படாது.

தாங்கள் சுகமடையவேண்டிய இடங்களில் எல்லாம் பிரிவினைகள் கிடையாது, அன்னியர்கள் சுகமடையவேண்டிய இடங்களில் எல்லாம் பிரிவினைகளை உண்டு செய்து வருவது அவர்கள் கோரிக்கைபோலும்.

இவ்வகையான கோரிக்கையை சரிவர நிறைவேற்றி சகல குடிகளையும் சமரசமாக இப்பிரிட்டிஷ் ராஜரீகத்தில் சுகத்திற்கும், ஆட்சிக்கும் கொண்டுவரும்படியான சட்டத்தை மகா கனந்தங்கிய மந்திரி லார்ட் மார்லியவர்கள் கொண்டு வந்திருக்கின்றார். அவற்றை நமது கருணைதங்கிய கவர்னரவர்கள் அடியில் குறித்துள்ளவாறு இராஜாங்க ஆலோசனை சங்கங்களிலும், முநிசபில் சங்கங்களிலும், இராஜாங்க உத்தியோக சாலைகளிலும், இராணுவ வகுப்பிலும், வைத்திய இலாக்காகளிலும், போலீஸ் உத்தியோகங்களிலும், இரயில்வே இலாக்காக்களிலும், கல்வியிலாக்காக்களிலும், அந்தந்த இலாக்காவின் மொத்தத் தொகைப்படிக்கு இவ்வகுப்பார் பிரிவினைப்படி, சேர்த்து விடுவார்களானால் சகல சாதியோரும் சீரும், சிறப்பையும் அடைவார்கள். பிரிட்டிஷ் ஆட்சியும் நீடித்த சுகநிலைபெறும்.

இராஜாங்க ஆலோசனைா சங்கத்துள் நூறு பெயர் நியமனமாக வேண்டுமானால் சாதிபேதமற்ற திராவிடர்களாம் இந்தியர்கள் 25-பெயரையும், சாதிபேதமுள்ள இந்தியர்கள் 25-பெயரையும், மகமதியர்கள் 25-பெயரையும், யூரேஷியர்கள் 13-பெயர்களையும், நேட்டிவ் கிறிஸ்ட்டியன்ஸ்கள் 12 பெயர்களையும் நியமித்து ஆலோசனைகளை நிறைவேற்றுவதானால் சகல குடிகளும் சுகம் பெறுவார்கள்.

இராஜாங்க உத்தியோகசாலைகளிலும், இம்மேறையே நியமித்து அலுவல்களை நடத்திவருவதானால் சகலசாதி மக்களும் மேலுமேலும் சுகமடைந்து விருத்தி பெறுவார்கள்.

இவற்றுள் முக்கியமாக இராஜாங்க எக்சிகூட்டிவ் மெம்பர் ஒருவரை தெரிந்து எடுத்துக் கொள்ளவேண்டியவற்றுள் ஒரு வருஷத்திற்கு தான் ஒவ்வொருவரை நியமிப்பது சுகமாகும். அவற்றுள் சாதிபேதமற்ற திராவிடருள் ஒருவரை ஒருவருஷத்திற்கும், சாதிபேதமுள்ள இந்தியருள் ஒருவரை ஒருவருஷத்திற்கும், மகமதியருள் ஒருவரை ஒருவருஷத்திற்கும், யூரேஷியருள் ஒருவரை ஒருவருஷத்திற்கும், நேட்டிவ் கிறிஸ்தவருள் ஒருவரை ஒருவருஷத்திற்கும் நியமித்து இராஜாங்க காரியாதிகளை நடத்துவதே மிக்க சுகமாகும்.

சாதிபேதமற்ற திராவிடர்கள் யாவரென்பீரேல்:- சிலகாலங்களுக்கு முன் இத்தேசத்துள் நூதனமாகக் குடியேறியுள்ள பராயசாதியோர்களின் வஞ்சினத்தால் பறையர்கள் என்றும், சாம்பான்கள் என்றும், வலங்கையரென்றும் அழைக்கப்பெற்ற பூர்வ பௌத்தக் குடிகளேயாம்.

- 2:34; பிப்ரவரி 3, 1909 -


43. செங்கல்பட்டு ஜில்லா மதுராந்தகம் தாலுகா 96-வது நெம்பர் ஓரத்தூர் கிராமம்

ஓரத்தூர் அக்கிராரவாசிகளுக்குள் சிலர் ஏழைக்குடிகளை ஏரிகளில் ஜலம் மொள்ளப்படாதென்றும், மாடுகளுக்குப் புல்லுகள் அறுக்கப்படாதென்றும், அவர்கள் ஆடுமாடுகளை மேய்வுகாட்டில் மேயப்படாதென்றும், புறம்போக்குக் காடுகளில் விழுந்துள்ள விறகுசுள்ளிகளைப் பொருக்கப்படா தென்றும் தடுப்பதற்கு யாதாமோர் அதிகாரமும் கிடையாது.