பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 157
 


இரயில்வே ஏஜண்டுகளோ தங்கள் மனம்போன போக்கில் ஒவ்வோர் ஏற்பாடுகளை செய்துவிடுகிறார்கள். மானேஜர்களோ அம்மேறை நடந்துக்கொள்ளுகிறார்கள். டிரைவர்களோ தங்கள் உழைப்பிற்குத் தக்கக் கூலியில்லையென்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு வண்டிகளை ஓட்டாமல் நின்றுவிடுகின்றார்கள். ஏஜண்டுகளோ தாங்கள் சொன்ன வார்த்தையை மீறிய டிரைவர்களை நீக்கிவிட்டு புதுடிரைவர்களைப் போட ஆரம்பிக்கின்றார்களன்றி பழைய டிரைவர்களுக்கே வேண புத்திகளைக்கூறி அவர்கள் உழைப்பிற்கேற்ற கூலிகளைக் கொடுத்து காப்பாற்றுவதுடன் தங்கள் வண்டிகளை நம்பியேறுகிறவர்களுக்கு இடுக்கம் வராது காப்பாற்றுவதைக் காணோம்.

மங்கப்பட்டினத்து இரயில்வேயின் துக்கம் இன்னும் மாறாதிருக்க என்னூர் இரயில்வே துக்கம் எழும்பிவிட்டது.

இவ்வகையான துக்கம் இன்னும் நேரிடுமாயின் இஸ்டீமருக்கு பயந்து இரயில் ஏறுகிறவர்களெல்லாம் இரயிலுக்கு பயந்து பிரயாணஞ்செய்வார்களோ செய்யமாட்டார்களோ தெரியவில்லை.

ஓர்வகையால் துணிந்து ஏறியபோதினும் சுகமாகத் தூங்கமாட்டார்களென்பது நிட்சயம்.

குடிகளுக்குத் தாய்தந்தையர்போல் விளங்கும் கருணை தங்கிய ராஜாங்கத்தோரே சற்றுக் கண்ணோக்கம் வைத்து இரயில்வே ஏஜண்டுகள் ஏற்படுத்தும் சட்டதிட்டங்கள் யாவையுந் தங்களுக்குத் தெரிவித்தே நடத்திவரவும் தெரிவிக்காமல் நடத்தும் காரியாதிகளில் குடிகளுக்கு ஏதேனும் குறைகள் நேரிடுமாயின் அதின் நஷ்டங்களுக்கு ஏஜண்டுகளே உத்திரவாதமென்றும் கூறுவதுடன் பழைய டிரைவர்களுக்கு ஓர்வகை அடையாளமும் புது டிரைவர்களுக்கு ஓர்வகை அடையாளமும் கொடுத்து கைகளில் கட்டிக்கொள்ளச்செய்து வண்டிகளை ஜாக்கிரதையில் ஓட்டும்படியான ஏதுக்களைத் தேடி, இடைவிடாது கண்ணோக்கம் வைத்துக் காப்பாற்றக்கோறுகிறோம்.

- 3:3; சூன் 30, 1909 -


60. இந்தியரைப்பற்றி கனம் லார்ட் மார்லிபிரபு அவர்கள் அறியவேண்டியவை இன்னும் அனந்தமாம்

ஐரோப்பா தேசத்தில் வாழுங் குடிகள் யாவரும் ஆங்கிலேயர்களே. அவர்கள் பேசுவதும் ஆங்கிலேயம்.

குணங்களோ, தங்களிருப்பில் பணங்களிருக்குமாயின் அவற்றைப் பெட்டியில் இருத்திப்பூட்டிட்டாமல் விருத்தி பெரும் (லிமிடெட்) கம்பனிகளிற் சேர்த்து மேலு மேலும் பாக்கியம் பெருகி சகலருக்கும் உபகாரிகளாக விளங்கிவருவதுமன்றி வித்தியா விருத்தியுள்ள விவேகிகளுக்கும் வேணப் பொருளளித்துப் பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

இந்துதேயத்திலோ இன்ன பாஷைக்குடிகள்தான் இந்தியரென்று கூறதற்கியலாது, இன்னசாதிதான் இந்தியர்களென்று வகுக்க இயலாது.

இத்தகையோர் சொற்பப் பணம் சேர்த்துவிடிலோ வீட்டைவிட்டு வெளிப்படாது. அப்பணப்பெட்டியின் சாவியோ, அரைஞாண் கயிற்றைவிட்டு அப்புறப்படாது. ஓர்வகை துணிபுகொண்டு பணம் வெளிவரினும் லிமிடெட் கம்பனிகளிற் சேர்க்கவோ மனத்துணிவுபடாது. துணிந்து சேர்த்தும் இலாபம் பெறுமோ பெறாதோ என்னுஞ் சந்தேகத்தில் நஷ்டம் வந்துவிடுமாயின் அவர்கள் பிராணனோ நிலைப்படாது.

இவ்விருதிரத்தாருள் ஐரோப்பியர் செயல்களையுங் குணாகுணங்களையும் நன்காராய்ந்துள்ளவர் இந்தியர்களின் செயல்களையுங் குணாகுணங்களையும் நன்காராயாது எண்ணிய கன்மங்களில் துணிவது இழுக்கேயாம்.