பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


அதாவது, ஐரோப்பியர்களில் பாக்கிய வந்தர்களிருப்பார்களாயின் பலருக்கு உபகாரிகளாயிருப்பது இயல்பாகும். இந்துக்களோ வட்டியாலும், வாடகையாலும் பலர் பணங்களையுங்கொண்டு ஒவ்வோர் பாக்கிய வந்தர்களாகத் தோன்றுவதியல்பாகும்.

அவ்வகைத் தோன்றிய பாக்கியவான் வித்தியாவிருத்தியையும் தேச க்ஷேமத்தையும் குடிகளின் சுகத்தையுங்கருதி அவற்றிற்கு சிலவிட மனம்வராது மடிந்தபின் விதரணையற்ற விதவைகளிடஞ் சேர, வீணே அழிவதைக் காண்கின்றோம்.

விருத்தியின்றி வீணேயழியுங் காரணம் சேர்த்த பொருளைக் கைவிடக்கூடாதென்னும் பேரவாவேயாம்.

இத்தகைய அவாவில் மிகுத்தவர்களும், சாதிபேதத்தில் பெருத்தவர்களும், சமய பேதங்களில் உறத்தவர்களுமாயிருப்போர்வசம் சுயராட்சிய பாரத்தைத் தாங்குங்கோள் என்று விடுவதானால் 1. அவாவின் மிகுதியால் உண்டாகும் கலகம் பெருகும். 2. சாதிபேதங்களால் உண்டாகுங் கலகம் பெருகும். 3. சமயபேதங்களால் உண்டாகுங் கலகம் பெருகும்.

இவற்றிற்குப் பகரமாய் ஒருவர் பொருளை மற்றொருவர் அபகரித்து அதினால் அடிதடி நேரிடுவதும், என்சாதி பெரிது, உன்சாதி சிறிதென்று கூறி அதனால் அடிதடி சண்டை நேரிடுவதும், என்சாமிபெரிது, உன்சாமி சிறிது, என்னாமம் வடகலை, உன்னாமம் தென்கலை, என்பூச்சு முன்றுகோடு, உன்பூச்சு குழைப்பூச்சென்று ஒருவருக்கொருவர் அடிதடி சண்டை நேரிடுவதும், அவைகளை விசாரித்து நீதி செலுத்துவதற்கு ஆங்கிலேயே அதிகாரிகளிடம் நீதிபெற்று வருவதுமாகிய கண்காட்சிகள் அமைந்த (ரிகார்டு)களிலும் அநுபவத்திலும் தெரிந்திருக்க, சுயராட்சிய ஆளுகையை அளிப்பதானால் எந்தசாதியாரை உயர்த்திக் கொண்டு எச்சாதியோரை நாசப்படுத்துவார்களென்றும் எந்தசமயத்தோரை உயர்த்திக்கொண்டு எச்சமயத்தோர்களை அழித்துவிடுவார்களென்றும் தீர்க்கவாலோசிக்க வேண்டியதாகும்.

இந்தியருக்குள்ள இத்தியாதி பேதங்களையும் கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் கண்ணோக்கம் வையாது ஐரோப்பியர்களுக்குள்ள அதிகாரத்தை எடுத்துவிட்டு இந்துக்கள் வசம் ஒப்பிவைப்பாராயின் இந்துக்களுக்குள் உண்டாகுங் கலகத்தை நிவர்த்திச் செய்துக்கொள்ளுவதற்கு ஐரோப்பியர்களைக் கோறுவார்களோ, அன்றேல் வேறு ராட்சிய ராஜாங்கத்தோரைக் கோறிக்கொள்ளுவார்களோ அதுவிஷயத்தை நமது பிரிட்டிஷ் ஆட்சியோர் பெரும்பாலும் ஆலோசிக்க வேண்டியதாகும்.

- 3:4; சூலை 7, 1909 -


61. கனந்தங்கிய லார்ட் கிச்சினரவர்களை இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் சேர்க்கப்படாதென்று மறுக்கின்றார்களாம்

பிரிட்டிஷ் ராஜரீகம் இந்தியாவில் தோன்றிய காலத்தில் மிலிட்டேரி கவர்னர்களும், மிலிட்டேரி கமிஷனர்களும், மிலிட்டேரி டிஸ்டிரிக்ட்டு மாஜிஸ்டிரேட்டுகளுமிருந்து ஆளுகை செய்துவந்தார்கள், குடிகளும் அவர்களுக்கடங்கி இராஜவிசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள்.

அத்தகைய மிலிட்டேரிகளின் ஆளுகை நாளுக்குநாள் குறைந்துவிட்டபடியால், “கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி” என்னும் பழமொழிக்கிணங்க சுதேசியக் கூச்சல் தோன்றிவிட்டது.

அக்கூச்சல்களுக்குக் காரணம்! இரண்டொரு மித்திரபேத சத்துருக்களிருந்து ஏழைக்குடிகளை முன்னிழுத்து விட்டு தாங்கள் யாதுமறியாதவர்கள்போல் பின் பதுங்கி இராஜவிசுவாசமற்ற காரியங்களை நடத்தி வருகின்றார்கள்.

இத்தியாதி மித்திரபேத சத்துருக்கள் தோன்றுவதற்கு தைரியம் இராஜாங்கக் காரியாதிகளை நடத்துபவர்களில் ஓர் மிலிட்டேரி உத்தியோகஸ்தரும் இல்லாதபடியினாலேயாம்.