பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் எடுத்தநோக்கத்தை சோர்வடையாமல் நடத்தி சகலசாதியோரிலும் பெருந்தொகையினராயிருந்து பலவகைக் கஷ்டங்களை அநுபவித்து வரும் ஏழைக்குடிகளை சகலரைப் போலும் சுகமடையுஞ் சட்டதிட்டங்களை முன்னுக்குக் கொண்டு வருவார்களென்று நம்புகிறோம்.

- 3:7; சூலை 28, 1909 -


67. கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியவர்களின் உபந்நியாசம்

கனந்தங்கிய பானர்ஜியவர்கள் இங்கிலாந்தில் செய்த ஓர் உபந்நியாசத்தில் இந்தியாவில் கொலைப் பாதகர்களில்லை. கிறீஸ்துப்பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே கொலைமுதலியவைகளை அற்று சீர்திருந்தினவர்கள் என்று புத்ததன்மத்தை விளக்கியிருக்கின்றார் அது சாத்தியமே.

ஆயினும் சங்கராச்சாரி அவதரித்து புத்ததன்மத்தையே ஓட்டிவிட்டாரென்று இந்தியர்கள் கூறிவருவதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

ஈதன்றி பாரதியுத்தத்தில் கிருஷ்ணரென்னுங் கடவுளே சாரதியாகத் தோன்றி அர்ச்சுனனைக்கொண்டு குருட்சேத்திர பூமியிற் தோன்றியவர்கள் யாவரையுஞ் கொல்லும்படிச் செய்தது போதாமல் அப்பாவங்கள் துலைவதற்காய அஸ்வமேத யாகஞ்செய்து மற்றும் சிற்றூர்களிலிருப்பவர்கள் யாவரையுஞ் சுற்றிக் கொல்லும்படிச்செய்தக் கதையைக் கண்டாரில்லைபோலும்.

இராமரென்னுங் கடவுள் தோன்றி இலங்கையென்னுங் தேசத்திலுள்ள சகலரையுங் கொன்றாரென்னுஞ் சங்கதிகளைக் கேட்டாரில்லைபோலும். மற்றுமுள்ள தேவர்கள்தோன்றி அவன் தலையை வெட்டிவிட்டார், காலைவெட்டிவிட்டாரென்பதுபோக எண்ணாயிரம் பௌத்தர்களை பத்தாயிரம் பௌத்தர்களை கழுவிலும் வசியிலும் கற்காணங்களிலும் வதைத்துக் கொன்றார்களென்று கூறும் கழுவேற்றிய படலத்தையும் கண்ணாரக் கண்டாரில்லைபோலும்.

இத்தியாதி மக்களைக் கொன்று மாளாக் கீர்த்தியைப் பெற்ற படுகொலைபோராது பசுமாடுகளையும் ஆடுகளையும், குதிரைகளையும் பதைபதைக்க நெருப்பிலிட்டுக் கொலைசெய்து தின்ற கொறூரக் கதைகளையும் கண்டிலர் போலும்.

இந்தக் கொலைக்களப்போர் ஓர்வகையிருப்பினும் பாரதக்கதை இராமாயணக்கதை கழுவேற்றுங்கதை சீவப்பிராணிகளை நெருப்பில் சுட்டுத்தின்னும் யாகக்கதை முதலியவற்றிற்குத் தலைவர்களாக விளங்குவோர் பூர்வ பௌத்தர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிப் பறையர்களென்று வகுத்து, பலவகையாலும் நிலைகுலையச் செய்து சுத்த சலங்களை கொண்டு குடிக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமலும், கருணைதங்கிய ராஜாங்க உத்தியோகங்களிலும் மற்றவர்களைப்போல இவர்களையும் சுகமடைய விடாமலும் கொல்லாமற்கொன்றுவரும் கொலைபாதகச்செயலைக் கண்ணாரக் கண்டேனும் காதாரக்கேட்டேனும் இரார்போலும்.

அந்தோ! ஆயிரத்தி ஐந்நூறு வருடமாக சத்தியதன்மங்கள் அயர்ந்தும் அசத்திய தன்மங்கள் உயர்ந்தும் இந்தியா படும்பாட்டையும், இந்தியர் கொடுங்கேட்டையும் கனந்தங்கிய பானர்ஜியவர்கள் நோக்காது அவரது சிவகாருண்யச் செயலைப்போல் இந்தியர்கள் யாவரும் சீவகாருண்யம் உள்ளவர்களாய் இருப்பார்களென்றெண்ணி பூர்வதன்மத்தின் படி இந்தியர்கள் கொலைப்பாதகர் அன்றென்று கூறுகின்றார். இந்தியர்களாம் பூர்வபௌத்தர்களை பறையர்களென்று தாழ்த்திக் கொல்லாமற் கொன்றுவருங் கொலையை நேரில்வந்து பார்வையிட்டு பரிந்து பேசுவாரென்று நம்புகிறோம்.

- 3:7; சூலை 28, 1909 -