பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 175
 


தூக்கிவிடுகின்றார்கள். காக்கவேண்டுமாயினும் நான்கு இந்தியர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டே கார்த்துவருகின்றார்கள்.

ஆதலின் நமது பானர்ஜியாரவர்கள் கூறியுள்ள முதலாவதபிப்பிராயம் ஆதாரமற்றதேயாகும். இரண்டாவது அபிப்பிராயத்தில் கவர்ன்மெண்டார் சில சாதியோர்களைமட்டிலும் பட்சபாதமாக நடத்துவது அமைதியுறாச் செயலுக்குக் காரணமென்று கூறுகின்றார்.

அங்ஙனம் சிலசாதியோரைமட்டிலும் கவர்ன்மெண்டார் பட்சபாதத்துடன் நடத்துவதாயின் இந்தியக் குடிகளில் அவர்கள் யாராயிருப்பர். கவர்ன்மெண்டாரால் பட்சபாதகமாக நடத்தப்படுவதால் அமைதியில்லாததற்கு காரணமுண்டாகிறதென்று கூறுவாராயின் அக்காரணஸ்தர் யாவரும் இவருக்குத் தெரிந்தே இருக்கும்போலும்.

அவ்வகைத் தெரியாதிருக்குமாயின் முதற் கூறியுள்ள வாக்கியத்தில் பொதுவாக ஜனங்களின் அபிப்பிராயத்தைக் கவர்ன்மெண்டார் அடியோடு அவமதித்துள்ளார்கள் என்று கூறியவர் இரண்டாவது வாக்கியத்தில் சிலசாதியாரை பட்சபாதகமாக நடத்துங்காரணமென்று கூறுவதில் அச்சாதியாரிவருக்குத் தெரிந்தவர்களாயிருக்கவேண்டுமென்று உத்தேசிக்க நேரிடுகின்றது.

அத்தகைய சில சாதியோரால் பலசாதியோருக்குத் துன்பமுண்டாவதைக் கண்ட நமது பானர்ஜியார் அச்சாதியாருக்கு மதி கூறி சீர்திருத்தாத காரணமென்னை? சிலசாதியோர்களை கவர்ன்மெண்டார் பட்ச பாதகமாக நடத்துகிறார்கள் என்பதில் அச்சாதியோருக்கு சுகத்தைக் கொடுத்து ரட்சிக்கின்றார்களா அன்றேல் அசுகத்தை கொடுத்து சிட்சிக்கின்றார்களா, விளங்கவில்லை.

சுகத்தைக் கொடுத்து இரட்சித்தார்களென்பரேல் இரட்சிக்கப் பெற்றவர்களைக் காணோம். அசுகத்தைக் கொடுத்து சிட்சித்தார்கள் என்பரேல் சிட்சிக்கப்பெற்றவர்களையுங் காணோம். ஆதலின் நமது பானர்ஜியார் கூறியுள்ள இரண்டாவது வாக்கும் ஆதாரமற்றதேயாம்.

மூன்றாவது, காலஞ் சென்ற மகாராணியாரவர்கள் இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்யாமல் இராஜாங்க நிருவாகத்தினின்று நீக்கி வைப்பதே அமைதியில்லாததற்கு காரணம் என்கிறார்.

கவர்ன்மெண்டார் இராணியார் வாக்கை பூர்த்தி செய்வதற்காகவே இந்தியர்களை தங்களைப்போல் ஜர்ஜிகள் நியமனங்களிலும், தங்களைப்போல் கலைக்ட்டர்கள் நியமனங்களிலும், தங்களைப்போல் அட்வோகேட்ஜனரல் நியமனங்களிலும், தங்களைப்போல் அட்மினிஸ்டிரேட்டர் நியமனங்களிலும் நியமித்தே முன்னுக்குக் கொண்டு வந்தார்கள்.

இதற்குள்ளாக இந்துக்களாகிய யாங்கள் சகல ராஜகீய காரியாதிகளையுந் தெரிந்துக்கொண்டோம், பிரிட்டிஷார் ஐரோப்பா கண்டம் போய் சேர்ந்துவிடுங்கள், எங்களுக்கு சுயராட்சியங் கொடுத்துவிடுங்கோளென்று குயின் விக்டோரியா மகாராணியாரவர்கள் தனது (பிராக்ளமேஷனில்) கூறாத வாக்கியத்தைக் கேட்க ஆரம்பித்துக் கொண்டபடியால் இராணியாரவர்கள் கொடுத்துள்ள வாக்கியச் செயல்களும் குறைந்து கொண்டே வருகிறது போலும்.

இராணியாரவர்கள் கொடுத்துள்ள வாக்கியங்களை இந்தியர்களுக்கு கவர்ன்மெண்டார் நிறைவேற்றிவருங்கால் இராணியார் கொடாத வாக்கியமாகும் சுதேசியத்திற்கு ஆரம்பித்துக்கொண்டபடியால் சொற்ப ராஜயே உத்தியோகங்களை அளித்து வருங்கால் சுயராட்சியம் வேண்டுமென்று வெளிதோன்றியவர்களுக்கு முற்றும் ராஜகீய சுதந்திரங்களை அளித்து விடுவதனால் கேட்காமலே சுயராட்சியஞ் செய்துக்கொள்ளுவார்களென்று உணர்ந்தோ இந்துதேசராட்சிய பரிபாலர்கள் கொடுத்துவந்த சுதந்திரங்களை குறைத்துவர ஆரம்பித்துக் கொண்டார்கள் போலும். ஆதலின் நமது பானர்ஜியாரவர்கள் இராஜகாரியா சுதந்திரத்தில் உள்ள குறைகள் யாவரால் உண்டாயதென்று உணராது கூறிய மூன்றாவது வாக்கியமும் ஆதாரமற்றதேயாம்.