பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சிறப்புரை


அயோத்திதாசர்: ஒரு கண்ணோட்டம்


பகலவனை அடையாளங்காட்ட அகல் விளக்கு ஒன்று ஆசைப்பட்டதைப் போல, தமிழரும் தமிழைக் கற்றவருமான பகுத்தறிவாள மாமனிதர் ஒருவர் தொண்டின் சிறப்பினைக் கூற நான் முன்வந்தது; வாய்ப்பு தந்தவரின் பெருந்தன்மையாலும் என் கொள்கை மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையாலும் என்றே கருதுகிறேன், எனது பாட்டனாரும் தந்தையாரும் அருந்தமிழ்ச்செல்வர் அயோத்திதாசர் அவர்களின் பற்றாளர்களாவார்கள். கடல் கடந்து சென்று வாழ்ந்த காலத்திலும் அவர்கள் அவரை மறக்கவில்லை. நானும் அவர்கள் வழி நின்றவன். எனவே இவ்வாய்ப்பை எனக்குக் கிடைத்த பெறும் பேறாகக் கருதுகிறேன்.

1930இலிருந்து என் இளமைப் பருவம் முதல் பண்டிதர் அயோத்திதாசரால் நடத்தப்பட்ட தமிழன்பத்திரிகையை, தன் இயலாமையிலும் படிக்குமாறு கேட்டு மகிழ்ந்த என் பாட்டனாரின் அன்புள்ளம் அந்த அறநெறியாள அந்தணர் மீது என்னை பக்தி கொள்ளச் செய்தது. இந்தப்பற்றைத்தொடர்ந்து என்னுள் வளர்த்த, என் தந்தையார் பாதுகாத்து வைத்திருந்த தமிழன் பத்திரிகை, மறுபிறப்பாக எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழ்ச் சமுதாயங்களின் திருக்கரங்களில் தொகுப்பாகத் தவழ வருவதைக் கண்டு பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சீரிய பணியில் மிகத் தீவிரம்காட்டி ஆண்டுகள் பல அலைந்து வெற்றி கண்டிருக்கும் நண்பர் ஞான. அலாய்சியஸ் அவர்களுக்குத் தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

அலாய்சியஸ் என்னை முதல் முறையாகச் சந்தித்தபோது தமிழக இனக்குழுக்களைப் பற்றிப் பேசினோம். அடுத்து உரையாடநேர்ந்த போதெல்லாம் தமிழினத் தலைவர்களைப் பற்றியும் அவர்களது பணிகளைப் பற்றியும் கருத்து பரிமாறிக் கொண்டோம். ஒரு முறை தமிழ்ச் சிந்தனையாளர்களைப் பற்றிப் பேச நேர்ந்தது. அச்சமயம் பண்டிதர் அயோத்திதாசர் அவர்களைப் பற்றிய கருத்து எங்கள் உரையாடலில் மய்யம் கொண்டது. சிந்தனையாளர்களில் பண்டிதருக்கு ஒரு தனியிடம் உண்டு; ஆனால் அவர் ஏன் மறைக்கப்பட்டவராக, மறக்கப்படுபவராக இருக்க வேண்டும் என்ற கேள்வியை அலாய்சியஸ் எழுப்பினார். இதற்கு மனம் இருப்போர்க்குப் பணமில்லை, பணம் இருப்பவர்க்கு மனமில்லை; மனமும் பணமும் இருப்பவர்கள் நமது சமூகத்தில் யாருமில்லை அதுதான் காரணம் என்று சொன்னேன்.

பகுத்தறிவாளர் பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனை வளத்தைக் கண்டு வியந்த அலாய்சியஸ் அவற்றைத் தொகுத்து வெளியிடும் விருப்பத்தைத் தெரிவித்தார். ஏற்கனவே பலருக்கு நூல்கள், பத்திரிகைகள், மாநாட்டு உரைகள், தீர்மானங்கள் போன்றவைகளைக் கொடுத்து ஏமாந்த நான் இறுதி முறையாக நம்புவோம் என்ற முடிவுக்கு வந்தேன். பல சந்திப்புகளுக்குப்பிறகு என்னிடமிருந்த தமிழன் பத்திரிகைத் தொகுப்பை அவர் முயற்சிக்கு உதவட்டும் என்று கொடுத்தேன்.

தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாதளவில் பல நாறு பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதிகளாக வெளி வருவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன், இது தமிழினத்திற்கேகூடஅதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத்தெரியக்கூடும் என்று கருதுகிறேன்.

இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கும் அலாய்சியஸ் தமிழ் நாட்டவரின், குறிப்பாகத் தமிழ்ப் பழங்குடி ஆதிதிராவிடரின்