பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 189
 


ஒரு விவாகஞ்செய்த மனைவி இருப்பாளாயின் மறுவிவாவாகஞ்செய்வது வழக்கமில்லை. தற்காலம் பலதேசத்தோர் சேர்க்கையினால் ஒரு விவாக மனைவியிருக்க மறுவிவாகமுஞ் செய்துவருகிறார்கள்.

ருது சாந்தி கலியாணமோவென்றால் பெண் மங்கை பருவத்துக்கு வந்தாளென்பதை பந்துக்களுக்குத் தெரிவித்து பெண்ணையலங்கரித்து வாத்தியகோஷமுடன் ஆனந்தங் கொண்டாடினால் சீக்கிரத்தில் விவாகம் முடியுமென்று கோறி ருது பந்து சேர்க்கை நடக்கும் வழக்கமானது பூர்வமுதல் நாளதுவரையில் நடந்தேறிவருகின்றது.

- 3:20; அக்டோபர் 27, 1909 -

12 - வது வினா. பெண்களுடைய விவாக சம்மந்தத்தை தொந்தந்தீர்க்கிற விபரமென்ன, அப்படிப்பட்டவர்களை திரும்ப சேர்த்துவைக்கிற விபரம் என்ன?

விடை: புருஷனும், இஸ்திரீயும் அட்டமூர்த்த முன்னிலையிலும், சபையோர் முன்னிலையிலும் ஒருவரைவிட்டு ஒருவரைப் பிரியோமென சத்தியபூமணஞ் செய்துக்கொண்டவர்களாகையால் விவாகபந்த விலக்கமானது விபசாரதோஷம் புலப்படுமானால் பெரியோர்களைக்கொண்டு ரூபித்து அவளை நீக்கிவிடுவது பூர்வமுதல் நாளதுவரையில் நடந்தேறிவருகிற தொந்தந்தீர்க்கும் வழக்கமாம். திரும்ப சேர்க்கும் வழக்கமானது மனைவியானவள் விபசார தோஷமின்றி ஏதோசில மனத்தாங்கலால் ஒருவருக்கொருவர் நீங்கியிருப்பார்களானால் மணவரையிற் செய்த சத்திய பயமும், பெரியோர்களின் வாக்கும் இவர்களை மறுபடியுஞ் சேர்த்து விடச்செய்கிறது.

13 - வது வினா. சாதாரண விவாகம், புனர் விவாகம் இவைகள் எப்படி நடந்துவருகிறது. அதற்குண்டாயிருக்கும் அநுமதி என்ன, அது நடந்து வருகிறதா?

விடை : சாதாரண விவாகம் ஒன்பதாவது விடையிற் கூறியிருக்கின்றன. பத்தாவானவன் சிறுவயதில் இறந்துவிடுவானாயின் அவனை மறந்துவிடும்படி அவனால் கழுத்திற் கட்டிய ஓர் அடையாளத்தை அறுத்து எடுத்துவிடுகிறபடியால் அவள் மறுவிவாகத்துக்குரியவளாயிருக்கின்றாள். இதற்கு அநுமதி தமயந்தியின் இரண்டாவது சுயம்வர ஆதரவைக்கொண்டு நாளது வரையில் விதவா விவாகமாம் புனர்விவாகம் நடந்தேறிவருகிறது.

14 - வது வினா. ஒவ்வொரு சாதிக்கும் விதம்விதமானப் பெயர்கள் என்ன, அவர்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள்?

விடை : இந்தக் கேள்வியானது இவர்களைக் கேழ்க்கக்கூடியதல்ல, ஆரடா மானியம் விட்டதென்றால் நான்தான் விட்டுக்கொண்டேனென்னும் பழமொழிக்கிணங்க தங்கள் தங்கள் இஷ்டம்போல் ஒவ்வொரு சாதிப் பெயர்களை வைத்துக்கொண்டார்கள். தங்களாற் சொன்னப்பெயர்களை எதிரிகளால் அழைக்கப்பெற்று வருகிறது.

இதன் விவரம் திராவிடசாதியோராகிய தமிழ்பாஷைக்குடிகளில் துற்குணமும், துற்செய்கை உடையவர்களுக்கு சுரசம்பத்தோரென்றும் நற்செய்கையும், நற்குணமுமுடையவர்களுக்கு தெய்வசம்பத்தோரென்றும் பிரித்ததுபோல் மலையாள பாஷையில் துற்குணமும், துற்செயலுமுள்ளவர்களுக்கு தீயரென்றும், நற்குணமும், நற்செய்கையுமுடையவர்களுக்கு நியாயரென்றும் அவரவர்கள் குணத்திற்கும் செயலுக்கும் உள்ள பேதங்கண்டு எழுதிவைத்திருந்த பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதியென்று வழங்கிவருங் காரணமென்னவென்று உய்த்து நோக்குவாரானால் ஒவ்வொரு சாதிகளுக்கும் விதம்விதமானப் பெயர்கள் வந்தவகை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

15 - வது வினா. அவர்கள் தரிக்கிற வஸ்திரங்கள், ஆபரணங்கள் எவை?

விடை: மலைகளைச்சார்ந்த குறிஞ்சிநிலப் பொருள்களும், கடலைச்சார்ந்த நெய்தநிலப் பொருள்களும், காடுசார்ந்த முல்லைநிலப் பொருள்களும், நீரின்றி படும் பாலைநிலப் பொருள்களும், மருத நிலமாகிய நாட்டிற் கொண்டுவந்து