பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 195
 


எக்காலத்து பஞ்சபாதகங்கள் அகன்று பஞ்சசீலங்கள் பெருகுகின்றதோ அக்காலமே வஞ்சநெஞ்சர்களுங் குறைந்து பஞ்சமும் நீங்குமென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 3:15: செப்டம்பர் 22, 1909 -


81. சுதேசமென்றும் சீர்பெற விரும்புவோர் பராயதேசத்தை பகைக்கலாகாதே

சுதேசமாகிய நமது நகரம் சீரும், சிறப்பும் பெற விரும்புவோர் அன்னியதேசத்தோரை விரோதித்துக் கொள்ளுவதினால் எடுக்கும் முயற்சிக்கு ஈதோர் கெடுக்கும் வழியென்றே எண்ணல் வேண்டும்.

அதாவது, அன்னியதேசத்தோருடன் சுதேசிகள் அன்பு பாராட்டுவோமாயின் அன்னியதேசத்தோர் சுதேசிகண்மீது அன்பு பாராட்டுவர்.

இத்தகைய இருவருக்குள்ள அன்பின் பெருக்கத்தாலும், சிநேக வாஞ்சையாலும் அன்னியதேசத்தோர் வித்தியா விருத்திகளை சுதேசி கண்டறிவதற்கும், சுதேசிகளின் வித்தியாவிருத்திகளை அன்னியதேசத்தோர் கண்டறிவதற்கும் ஏதுக்களுண்டாகும்.

அன்பின் பெருக்கமும், சிநேக வாஞ்சையும் எவ்வளவுக்கெவ்வளவு பெருகுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு இருதேசமும் சீர்பெறும்.

அன்பின் பெருக்கத்தையும், சிநேகவாஞ்சையையும் மாற்றி வித்தியா சுருக்கத்தையும், விரோதப் பெருக்கத்தையும் தேடிக் கொள்ளுவோமாயின் சருவ நாகரீகமும் விட்டு அடைந்துவரும் வித்தியாவிருத்தியுங் கெட்டு பாழடைவதுடன் மற்றுமுள்ள அன்னியதேசத்தோரும் நமது சுதேசிகளை விரோதிகளாகவே பாவிப்பர். அத்தகைய பாவனையால் சுதேச சீரும் சிறப்பும் கெடுமென்பது திண்ணம்.

சுதேசத்தை சிறப்பிக்கச் செய்ய வேண்டியவர்கள் விரோத சிந்தையை விருத்தி செய்துக்கொள்ளுவது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டதற்கொக்கும்.

சுதேசிகளின் விரோதவிருத்தியை ஆராய்வோமாக. அன்னியதேசத்தோர் செய்யும் குல்லாக்களை வாங்கப்படாதென்று தடுக்க முயல்வதினால் சுதேசிகளுக்குள் அக்குல்லாவை விருப்புடன் அணைபவர்களுக்கும் விரோதம், அக்குல்லாக்களை அன்னியதேசங்களிலிருந்து தருவித்து வியாபாரஞ்செய்யும் சுதேசிகளுக்கும் விரோதம், அன்னியதேசத்தில் அக்குல்லாக்களை செய்வோருக்கும் விரோதம், இத்தியாதிவிரோதங்களினால் சுதேசிகளுக்கே ஒற்றுமெய்க்கேடு உண்டாகி சுதேசங் கெடுவதற்கு ஈதோரறிகுறியாகும்.

இத்தகைய விரோத சிந்தைகளையும் வீணடம்ப வார்த்தைகளையும் அகற்றி சுதேச கனவான்களும், சுதேச வித்தியா விவேகிகளும் ஒன்றுகூடி அன்னிய தேசத்தோர் குல்லாக்களைக் கையிலேந்தி இஃது எத்தகைய பஞ்சினால், நாரினால், கம்பளத்தினால் செய்துள்ளார்களென்று கண்டறிந்து அக்குல்லாக்களை சுதேசிகளே செய்து குறைந்த விலைக்கு விற்பனைச் செய்வரேல், விரோத சிந்தனைகள் யாவுமற்று சுதேசிகள் யாவரும் வித்தியா விருத்தியை நாடுவார்கள்.

அங்ஙனமின்றி அக்குல்லாவை செய்யும் பொருட்களும், அதன் கருவிகளும் இத்தேச வித்தியா புருடர்களுக்கு விளங்காவிடின் அன்னியதேச வித்தியாசாலைகளுக்கு அனுப்பி கற்றுவரத்தக்க முயற்சிகளைச் செய்து அக்குல்லாவை அணைபவர்களுக்கும், அதனை தருவித்து வியாபாரஞ் செய்பவர்களுக்கும் விரோதமில்லாச் செயலை விருத்தி செய்வதாயின் சுதேசிகளுக்குள்ளாகவே அன்பும், ஐக்கியமும், அறிவும் பெருகி வித்தியா விவேகிகள் தோன்றுவதுடன் அன்னியதேசத்தோரும், சுதேசிகளும் அன்பு பொருந்தி வாழ்வார்கள்.

- 3:16; செப்டம்பர் 29, 1909 -