பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 199
 


சோம்பேரிகளாய் பிச்சை இரந்து தின்பவர்களை மிலேச்சர்களென்றும், கொலை, களவு முதலியவைகளால் சீவிப்பவர்களை தீயர்களென்றும், விபச்சாரம் கள்ளருந்தல் முதலியச் செயலுடையோரை இழிந்தோரென்றும், தங்கள் சுயத்தொழிலின்றி எக்காலும் ஒருவரை வணங்கி சீவிப்பவர்களும் விவேகமற்றவர்களுமானோரை தாழ்ந்தவர்களென்றும் வகுத்திருந்தார்கள்.

இத்தகைய செயலுள்ளோர் யாவரென்றாயுங்கால் சகலசாதியிலும் கல்வியற்றோரிடம் அமைந்தேயிருக்கின்றது. கல்வி கற்றவர்களிடத்து உயர்ந்த குணத்தையும், உயர்ந்த செயலையுங் காணலாம். கல்வி கல்லாரிடத்து தாழ்ந்த குணத்தையும் தாழ்ந்த செயலையுங் காணலாம். இஃது அநுபவப் பிரத்தியட்சமாதலின், எச்சாதியோனாயிருப்பினும் கல்விகற்று விவேக முதிர்ந்தோனை உயர்ந்த வகுப்போனென்றும், கல்லாது அவிவேகமிகுப்போனை தாழ்ந்த வகுப்போனென்றுங் கூறல்வேண்டும்.

இதுவே சகலதேச விவேகமிகுத்தோர்களின் சம்மதமாகும். அங்ஙனமின்றி கல்விகல்லாது அவிவேக தாழ்ந்தசெயலை உடையவர்களிற் சிலர் தங்களுக்குள்ள தனச்செருக்கினால் கல்விகற்றவர்களும், விவேகமிகுத்தவர்களும் உயர்ந்த குணமும், உயர்ந்த செயலும் உள்ளோர்களை தாழ்ந்தசாதியோர் என்றும், தாழ்ந்த வகுப்போரென்றுங் கூறுவது நியாயமாகுமோ. அத்தகைய அந்நியாய வார்த்தைகளை விவேகிகளும் ஒப்புக்கொண்டு தாழ்ந்த சாதியோன் யார், தாழ்ந்த வகுப்போன் யார், அவன் எவ்வகையால் தாழ்ந்த சாதியானான், நீரெவ்வகையால் உயர்ந்தசாதியானீரென்று விசாரியாத பத்துப்பெயர் தங்களுக்குத் தாங்களே உயர்ந்தவர்கள், உயர்சாதியோரென்னும் பெயரை வைத்துக்கொண்டு அவர்களுக்கு விரோதிகளாயுள்ள நூறுபெயர்களைத் தாழ்ந்த வகுப்போர்களென்றும், தாழ்ந்த சாதியோர்களென்றுங் கூறுவதானால் அம்மொழி விவேகமிகுத்த நீதியதிபர்களுக்குப் பொருந்துமோ. கருணானந்த நீதியதிபர்களும் நீரெப்படி உயர்ந்தவனானீர், அவனெப்படி தாழ்ந்தவன் ஆனானென்னும் விசாரிணையின்றி ஒருசார்பினர் மொழிகளைக் கேட்டுக் கொண்டே தீர்ப்பளிக்கப்போமோ.

உலகவாழ்க்கையோ தேருருளை ஒத்தது. தேருருளை கீழதுமேலதாய் வருவதுபோல் தாழ்ந்தவன் உயர்ந்தவனாகவும், ஏழை கனவானாகவும், உயரும்படியானக் காலமுண்டாகும். அக்காலத்தில் தற்காலத்து உயர்ந்துள்ளவர்களின் பலன் செய்துள்ள கன்மத்துக்கீடாய் அநுபவித்தே தீரல்வேண்டும்.

மற்றவர்களை மனங்குன்ற தாழ்த்தியச்செய்கை தங்களை மனங்குன்ற மற்றவர்கள் தாழ்த்தாமல் விடார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 3:19; அக்டோபர் 20, 1909 -


86. செளத்தாபிரிக்காவிலும் சுதந்திரம் வேண்டுமாம்

இந்தியாவிலிருந்து செளத்தாபிரிக்காவுக்குக் குடியேறியுள்ளவர்களுக்கு சமரசவாட்சி கேழ்பவர்கள் இந்தியப் பூர்வக்குடிகளாகிய திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அடியோடு தாழ்த்தி அலக்கழிக்கலாமோ. அன்னியதேசத்திற் சென்றிருக்குங் குடிகளுக்காக அதிகப் பிரயாசைப்படுகிறவர்கள் சுதேசத்திற் கஷ்டப்படும் பெருந்தொகைக் குடிகளுக்கு சமரச சுகம், சமரச வாட்சி, சமரச சேர்க்கை ஏன் கொடுக்கலாகாது. அன்னியதேசவாசிகளாகிய செளத்தாபிரிக்கரிடம் இந்தியாவிலிருந்து குடியேறியுள்ளவர்களுக்கு சமரச சுகங் கேட்கும் நீதிமான்கள் இந்தியாவிலுள்ள ஏழைக்குடிகளுக்கும் சமரச சுகத்தை அளிக்க வேண்டுமென்னும் முயற்சியை ஏனெடுக்கப்படாது.

இந்தியாவிலுள்ள ஏழைக் குடிகளின் கஷ்டநிஷ்டூரங்களை கவனியாது, செளத்தாபிரிக்காவுக்கு குடியேறியுள்ள இந்தியர்க்கு சமரச சுகங் கேட்பது என்ன விந்தையோ விளங்கவில்லை. அன்னியதேசத்திற் குடியேறியுள்ளவர்