பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 203
 


இத்தென்னிந்தியாவிலுள்ளக் கனவான்களும், வட இந்தியர் கண்டுள்ளப் பெயரையொட்டி (டிப்பிரஸ் கிளாசை) முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்று வெளிதோன்றியிருக்கின்றார்கள். இவர்களது நன்னோக்கம் சாதியில் தாழ்ந்தவர்களென்று தாங்களே ஏற்படுத்தி தாங்களே தலையெடுக்கவிடாமல் நசித்துவருகின்றார்களே அவர்களை சீருக்குக் கொண்டுவரப்போகின்றார்களா, அன்றேல் சகலசாதியோரினும் தனத்திலுங் கனத்திலுந் தாழ்ந்துள்ளவர்களை சீருக்குக் கொண்டுவரப்போகின்றார்களா, இவர்களின் அந்தரார்த்தம் விளங்கவில்லை.

தங்களால் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப்போகிறோம் என்பாராயின் எந்த செயலால் எம்மொழியால் தாழ்த்தி இழிவடையச் செய்தார்களோ அச்செயலையும், அம்மொழியையும் அவரவர்களைக்கொண்டே அகற்றி அவரவர்கள் கல்விக்கும், அந்தஸ்திற்குத் தக்கவாறு சமரசமாக சேர்த்துக்கொள்ளுவதுடன் சாதிபேதமற்ற திராவிடர்களை சாதிபேதம் வைத்துள்ளோர் மிருகங்களிலுந் தாழ்ச்சியாக நடத்திவரும் செயலை அகற்றும்படியான நல்லெண்ணத்தைக்கொண்டு நடத்துவார்களாயின் அஃது தென்னிந்தியர் செய்யும் சீர்திருத்தத்திற்கு அழகாகும். அங்ஙனமின்றி பொதுவாக டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகிறோமென்பதில் ஐயர், ஐயங்காருக்குள்ளும் டிப்பிரஸ்கள் இருக்கின்றார்கள், முதலியார்களுக்குள்ளும் டிப்பிரஸ்சுகள் இருக்கின்றார்கள், நாயுடுகளுக்குள்ளும் டிப்பிரசுகளிருக்கின்றார்கள், செட்டிகளுக்குள்ளும் டிப்பிரஸ்சுகளிருக்கின்றார்கள். இவர்களுக்குள் எந்த டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகின்றார்கள்.

இவற்றுள் தங்களாலேயே தாழ்த்தி தாங்களே தலையெடுக்கவிடாமற் செய்து நசித்துவிட்டவர்களை தாங்களே சீர்திருத்தப் போகின்றோமென்னும் பத்து பெயருக்கு இத்தகைய நல்லெண்ணம் உண்டாயிருக்குமாயின் அவர்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு அஃது எதிரடையாகவே தோன்றும். ஆயிரம் பெயர் தாழ்த்திவரும் செயலையும், இழிவுகூறு மொழியையும் பத்து பெயராலடக்கி சிறப்புச் செய்யப்போமோ. பத்துப்பெயரும் விடாமுயற்சியிற்கூட்டி பணங்களை சேகரித்து தங்கள் குலத்தோர் பார்வையில் வைப்பார்களாயின் நெடுங்கால விரோதத்தால் தாழ்த்திக்கொண்டே வந்த அநுபவம் ஒழிந்து கல்வியையும், கைத்தொழிலையும் போதித்து களங்கமற சீர்படுத்துவார்களோ, ஒருக்காலும் ஆகா.

காரணம், தன்னவ ரன்னிய ரென்னும் சாதிபேதமில்லாமலும், தன்மதம் பிரமதமென்னும் மதபேதமில்லாமலும், கறுப்பு வெள்ளை என்னும் நிறபேதமில்லாதவர்களுமாகிய மிஷநெரிமார்கள் கருணைகொண்டு சாதிபேதமுள்ளவர்களால் தாழ்த்தப்பட்டு நசிந்து நிலைகுலைந்திருக்கும் சாதி பேதமற்ற திராவிடர்களை சீர்திருத்தவேண்டி கல்விசாலைகள் வைக்கமுயலுங்கால் எவ்வளவோ இடுக்கங்களைச் செய்து எழியவகுப்பாரை முன்னுக்குக் கொண்டு வரவிடாத ஏதுக்களைச் செய்து வந்தார்கள்.

அத்தகைய விரோதச்சிந்தையைச் சாதிபேதமுள்ளோர் சாதிபேதமில்லார்மீது வைத்துள்ளார்கள் என்பதை கனந்தங்கிய பச்சையப்பன் கலாசாலையுள் கைத்தொழிற்சாலை ஏற்படுத்தி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் மட்டிலும் அக்கைத்தொழிற்சாலயில் வந்துக் கற்றுக்கொள்ளலாமென வெளியிட்டுள்ள விளம்பரமே போதுஞ் சான்றாகும். இத்தியாதி விரோதச் சிந்தையுள்ளார் மத்தியில் பத்து பெயர் கூடிக்கொண்டு ஆறுகோடி மக்களை சீர்திருத்துகிறோமென்பது அதிசயமேயாகும்.

சாதிபேதமென்னுந் துர்நாற்றமானது நீங்குமளவும் சாதிபேத மற்றுள்ளாரை அவர்கள் நல்லெண்ணப் பூர்த்தியாக சீர்திருத்துவார்களென்பது சந்தேகமேயாம்.

ஆதலின் சீர்திருத்தக் கனவான்கள் அன்புகூர்ந்து (டிப்பிரஸ் கிளாசென்போர்) யாவரென்று தெரிவிக்கும்படி வெகுவாகக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

- 3:22; நவம்பர் 10, 1908 -