பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 205
 


பிரிட்டிஷ் துரைத்தனம். கல்வி கொடுத்து காப்பாற்றிவருவது பிரோட்டிஸ்டென்ட் பாதிரிகளின் கருணை, இவ்விருதிரத்தோர் செய்துவரும் நன்றியை மறந்து சாண் தண்ணீரில் மல்லாந்து விடுவது போலும், வெல்லமென்னும் வாயை நக்குவது போலும் சத்துருக்களின் சொற்பப் பிரயோசனத்தை நாடியவர்பாற் சேருவதாயின் உள்ள சுகமுங்கெட்டு கூடியசீக்கிரத்தில் நாசமடைவோம் என்பது சத்தியம். இதனை உண்மெய்க்கு உத்தாரமாய் நம்புங்கள், நம்புங்கள். பிரிட்டிஷ் ஆட்சியே என்றும் நிலைக்க வன்புகூறுங்கள் அன்பு கூறுங்கள்.

- 3:22; நவம்ப ர் 10, 1909 -


91. போலீஸ் உத்தியோகம்

தற்காலம் இத்தேசத்தில் போலீஸ் உத்தியோகஸ்தர்களை அதிகரிக்கச்செய்யவும், பணச்சிலவுண்டாகவும் நேரிடுங் காரணம் யாதெனில்:- தேசத்தில் துற்செய்கை மிகுத்தோரும், கள்ளரும், பொய்யரும், கொலையரும், வெறியரும் அதிகரிப்பதினால் போலீஸ் உத்தியோகஸ்தர்களை அதிகரிக்கச்செய்யவும் பணவிரையமாக்கவும் நேரிடுகின்றது.

அத்தகைய துற்சனர்களும், கள்ளரும் பெருகுவதற்குக் காரணம் யாதென்பீரேல், கைத்தொழில் பெருக்கமில்லாமலும், விவசாயப் பெருக்கமில்லாமலும் சோம்பேரிகள் அதிகரித்துவிட்டபடியால் கொலைத் தொழிலிலும், களவுத் தொழிலிலும் பிரவேசித்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் குடிகளைக் கண்கலங்கச் செய்துவருகின்றார்கள்.

யாதொரு தொழிலுமின்றி சோம்பேரிகளாய்த் திரிபவர்களையும் சாமிகள் வேஷம் போட்டு ஏழைகளை வஞ்சிப்பவர்களையும் பெரியசாமிகளென்று வேஷமிட்டுப் பிச்சையிரந்து தின்பவர்களையும் இராஜாங்கத்தோர் கணக்கெடுத்து அவரவர்களுக்குத் தக்கக் கைத்தொழிலையும் விவசாயத் தொழிலையுங் கொடுத்து வேலைவாங்குவார்களானால் தானிய விருத்தியும், கைத்தொழில் விருத்தியும் பெருகுவதுடன் போலீசுக்குச் சிலவிட்டுவரும் பணமும் மிகுதியாகும். சோம்பலில் தேகத்தை வளர்ப்பதால் வியாதிகளும் அதிகரித்து வைத்தியசாலைகளுக்கும் பணச்சிலவு அதிகரிக்கின்றது. சோம்பேரிகள் கைத்தொழில்களிலும் விவசாயத் தொழில்களிலும் பிரவேசிப்பார்களானால் சோம்பலும் நீங்கி வியாதியுங் குறைந்து வைத்திய சாலைச்சிலவும் மிகுந்துபோம்.

இவற்றை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்து கைத்தொழிலையும், விவசாயத்தையும் முன்பு கூறியுள்ள மூன்று வகை சோம்பேரிகளைக் கொண்டு நடத்துவார்களாயின் போலீஸ் உத்தியோகஸ்தர்களையும் அதிகப்படுத்தவேண்டியதில்லை. போலீஸாருக்கும் அதிக கஷ்டமிருக்கமாட்டாது. ஒவ்வோர் கிராமங்களிலும், பட்டினங்களிலும் ஓர் தொழிலும் அற்றிருப்பவர்களை விடாமற் கணக்கெடுத்து தொழிலளித்தா தரிக்க வேண்டுகிறோம்.

- 3:22; நவம்பர் 10, 1909 -


92. வர்ஜனஞ்செய்தால் வழிவிடும்போலும்

அந்தோ, நம்தேயத்தில் சூத்திரரென்று வழங்கப்படுவோர் (வர்ஜனமென்னும்) அந்நியதேச சரக்குகளை பாய்க்காட் செய்தல் அதாவது அந்நியதேசத்தோர் சரக்குகளை வாங்குவதில்லையென்று நிபந்தனை செய்வதுடன் கண்டிப்பாக வாங்காமலிருப்பார்களானால் அந்த சூத்திர சாதியோரை பிராமண சாதிகளென்போர் உயர்த்திவிடப்போகின்றார்களாம்.

அவ்வகையாய் பிராமணர்கள் என்போர் வார்த்தைக்கு இசைந்து சூத்திரர்கள் என்போர் அந்நியதேச சரக்குகளை பாய்காட் செய்து விடுவார்களாயின் அச்சூத்திரரை வைசியராக்கி விடுவார்களோ, க்ஷத்திரியராக்கி விடுவார்களோ அன்றேல் பிராமணர்களாகத்தான் செய்துவிடுவார்களோ விளங்கவில்லை.