பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
208 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 


ஏழைகள் பார்ப்பார்கள் பூமியை இலவசமாக உழுது பயிர் செய்யாமல் தங்கள் பூமிகளை மட்டிலும் சீர்படுத்திக் கொண்டிருப்பார்களாயின் அதிகாரப் பார்ப்பார் ஆதரவைக்கொண்டு உள்ள பூமியையும் விட்டோட்டி விடுகின்றார்கள்.

இவ்வகையாய் பார்ப்பான் வீட்டு பல்லிமுட்டை , பறையன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும் அதிகாரத்திலிருப்பதை பெங்கால் பத்திராதிபர் கண்ணோக்கி சீர்திருத்தாது ஐரோப்பியரை நிந்திப்பதால் யாதுபயன். தாங்கள் ஐரோப்பியர்களின் மீது கூறியுள்ள குறைகளில் பதின்மடங்கு குறை சாதித்தலைவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியோர்களை நடத்தி வருகின்றார்கள்.

இத்தகையக் கன்மத்துக்கீடாய் பெரிய சாதிகளென்போர் பிரிதிபலன் பெருவதைப் பத்திராதிபர் அறியாது ஐரோப்பியரை நிந்திப்பது அழகின்மெயேயாம்.

இத்தேசத்தோருக்குள்ள சுவாபம் யாதெனில், சாதித்தலைவர்களாய் ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு சகல சாதியோரும் அடங்கி வாழ்வார்களாயின் அதிக சந்தோஷம். இராஜாங்கத்தோரும் அதை அநுசரித்தே நடந்துக்கொள்ளவார்களாயின் அதனினு மிக்கசந்தோஷம்.

அலைகள் யாவற்றையும் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் கவனியாது தாழ்ந்தசாதியோனும் மனிதனே, உயர்ந்த சாதியோனும் மனிதனேயென்று சமரசமாக நடாத்தி வருவதில் முன்னிருந்ததுபோல் தங்களை சற்று உயர்த்திக்கொள்ள வழிதேடுகின்றார்கள்.

அத்தகைய வழி தங்களால் தாழ்த்தப்பட்டவர்களை எக்காலத்து உயர்த்துகின்றார்களோ அக்காலத்தில் தான் அவ்வழி திரந்து சமரசுகத்தைக் கொடுக்கும். இதன் மத்தியில் அதன் சுகங் கிடைக்காதென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 3:24: நவம்பர் 24, 1909 -


94. கல்விகற்றும் மனோகலக்க விருத்தி உண்டாவதென்னோ

தற்காலம் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியினுட்பட்ட லண்டனிலும் இந்தியாவிலும், கல்வி கற்றவர்கள் நூற்றிற்கு ஒருவரிருவர் இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சியின் நன்னோக்கத்தால் நூற்றிற்கு பத்து பதினைந்துபேர் கல்வி கற்றவர்களென்று கூறுதற்கு ஆதாரமாயிருக்கின்றது.

கல்வி கற்கக்கற்க கசடறுமென்னும் முதுமொழிக்கு மாறாக கற்கக்கற்க மனோகலக்கவிருத்தி பெற்றுக் கலகவிருத்தி செய்துவருகின்றார்கள்.

அதாவது லண்டனில் முன்பு கற்றறிந்த விவேகிகள் யாவரும் தேச விருத்தியையும், மக்கள் விருத்தியையும் மிக்கக் கருதி தாம்கற்ற பலனை அளித்துவந்தார்கள். தற்காலத்திலோ தாங்கள் கற்றக் கல்வியை வீண்கலகத்தில் உபயோகித்து தங்கள் தேசச்சீரையும் மக்கட்சீரையுங் கெடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.

அவைகள் யாதெனில், அன்னிய தேசத்தானொருவன் அவ்விடஞ்சென்று எங்கள் தேசத்தோரை ஐரோப்பியர்வந்து சீர்கெடுத்துவிடுகின்றார்களென்று கூறுவானாயின் அவன் வார்த்தைகளை மெய்யென்று நம்பிக்கொண்டு கட்சி பிரிதிகட்சிகளை ஏற்படுத்தி வீண்வாதங்களை வளர்த்து ஒருவருக்கொருவர் மனத்தாங்கலைப் பெருக்கித் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று சாதிக்க ஏற்படுகின்றார்கள்.

அத்தகைய சாதனைப் புருஷர்கள் எவனால் எத்தேசம் சீர்கெடுகிறதென்று கேழ்விப்படுகிறார்களோ அத்தேசத்திற்கே நேரிற்சென்று ஐரோப்பியர்களால் நாளுக்கு நாள் அத்தேசம், சீரும் சிறப்பும் பெற்று வருகின்றதா அன்றேல் முன்னிலையினுஞ் சீர்கெட்டுவருகின்றதாவென்று ஆய்வதுடன் அத்தேசக்குடிகளை அத்தேசத்தோரே பாழ்படுத்தி சீர்கெடுக்கின்றார்களா, ஐரோப்பியர்களால் சீர்கெடுகின்றார்களா என்றாராய்ந்து பேசுவார்களாயின் சகலரும் சீர்பெறுவார்கள்.